Monday, August 3, 2009

புலிகளற்ற தேசத்தில் சுஹதாக்கள் தினம்!


வருடாந்தம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தேசிய சுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் இந்த வருடம் அனுஷ்டிக்கப்படுகின்ற சுஹதாக்கள் தினத்திற்கும் இதற்கு முன்னர் அனுஷ்டிக்கப்பட்ட சுஹதாக்கள் தினங்களுக்குமிடையே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கின்றது.
இலங்கை முஸ்லிம்கள் சுஹதாக்கள் தினம் என ஒரு நாளைப் பிரகடனப்படுத்தி அதனை வருடாந்தம் அனுஷ்டித்துவர வேண்டியதற்குக் காரண கர்த்தாக்களாயிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று நம்மத்தியில் இல்லை என்பதே அந்த வித்தியாசமாகும்.

1980 களின் பின்னர் வடக்கு கிழக்கில் புலிகள் கட்டவிழ்த்துவிட்ட ஆயுதக் கலாசாரம் இதுவரை சுமார் 7000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிரைக் குடித்திருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல அமைந்ததுதான் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையாகும். 1990 ஆகஸ்ட் 3 ஆம் திகதி காத்தான்கடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல், ஹுசைனியா தைக்கா என்பவற்றில் இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அல்லாஹ்வின் இல்லத்தினுள் வைத்து பாசிசப் புலிகளால் அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடூரம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சர்வதேச ரீதியில் கூட இலங்கை முஸ்லிம்கள் குறித்துப் பேசப்படுமிடங்களிலெல்லாம் காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலையும் ஞாபகப்படுத்தப்படுமளவு இச் சம்பவம் வரலாற்றில் இரத்தக் கறைகளால் பதியப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் காத்தான்குடியை மையமாகக் கொண்டு இயங்கிவரும் முஸ்லிம் தேச சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் ஆகஸ்ட் 3 ஆம் திகதியை தேசிய சுஹதாக்கள் தினமாகப் பிரகடனப்படுத்தி ஞாபகார்த்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

கத்தமுல் குர்ஆன், அன்னதானம், சுஹதாக்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குதல், சுஹதாக்கள் நினைவுச் சொற்பொழிவு என வருடாந்தம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட சில வருடங்களில் மாத்திரம் மிகப் பிரமாண்டமான அளவில், தேசிய, சரவதேச ஊடக கவனயீர்ப்புகளுடன் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்போது நாட்டின் முக்கிய முஸ்லிம் அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் பங்கேற்றிருக்கின்றனர். சுஹதாக்களின் பெயரால் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

சில சமயங்களில் சுஹதாக்கள் தினமேடை முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆடுகளமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஷûஹதாக்களை நினைவு கூர்ந்து மலர்களும் துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் "சல்லடைத் தேசம்' எனும் பெயரில் சுஹதாக்கள் நிறுவனம் வெளியிட்ட ஆவணத் தொகுப்பை முக்கியமானதாகக் கொள்ளலாம்.

இதற்கப்பால் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கப் பெறும் உதவிகள் அவ்வப்போது சுஹதாக்கள் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இக் குடும்பங்களுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய வகையில் இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க உதவியும் வழங்கப்படவில்லை எனும் பெருங்குறைபாடு இருப்பது உண்மை.

சுஹதாக்கள் குடும்பங்களுக்காக ஒரு வீடமைப்புத் திட்டமோ, அவர்களின் பிள்ளைகளுக்கான நிலையான புலமைப்பரிசில் திட்டமோ அல்லது சுய தொழில் உதவிகளோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
ஒரே நாளில் விதவைகளான தாய்மார்கள், தமது உறவினர்களின் உதவியுடனும் குடிசைக் கைத்தெõழில்கள் மூலமுமே குடும்பங்களை ஓட்டி வந்திருக்கின்றனர். இக் குடும்பங்களில் இன்று திருமண வயதை எட்டிய எத்தனையோ யுவதிகள் திருமணம் முடிப்பதற்கான வசதி வாய்ப்புகளின்றி அல்லல்படுகின்றனர்.

அந்த வகையில்தான், இனிவரும் காலங்களிலாவது இக் குடும்பங்களுக்கான நிலையான உதவிகள் சென்றடைவது குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.

இந்த நாட்டில் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்த காலப் பகுதியில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல் படுகொலையை முன்னிறுத்தி முஸ்லிம் தேச அரசியலில் முக்கிய காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதனை மையப் பொருளாகக் கொண்டு இலங்கையின் இன முரண்பாட்டில் சிக்குண்ட முஸ்லிம் சமூகத்தின் இழப்புக்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவை அக்காலப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க பிரதிபலன்களையும் வெளிப்படுத்தியிருந்தன.

ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்ட நிலையிலும் "சுஹதாக்கள் தினம்' எதனை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்படல் வேண்டும் என்பநது கலந்தரையாடப்பட வேண்டிய ஒரு விடயமாகும். வெறுமனே வருடாந்தம் அனுஷ்டித்தல் என்பதற்கப்பால் ஒரு தூய்மையான இலக்கை நோக்கிய நீண்ட கால வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படல் அவசியம்.

வடக்கு கிழக்கில் புலிகளின் அச்சுறுத்தல் நிலவிய காலப் பகுதியில் சுஹதாக்களின் பெயரால் ஏதேனும் முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு பலரும் அஞ்சியது உண்மைதான். ஷுஹதாக்கள்தின மேடைகளில் புலிகளை விமர்சித்தவர்களை பின்னாளில் புலிகள் துப்பாக்கியுடன் தேடியலைந்த வரலாறுகளும் இல்லாமலில்லை.

ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. புலிகளை ஒழித்த படையினரை சுஹதாக்கள் நினைவுப் பூங்கா அருகிலேயே மேடையேற்றி கௌரவிக்கும் அளவு இன்று நிலைமை முற்றிலும் மாற்றமடைந்திருக்கிறது. எனவே இந்த சாதகமான சூழ்நிலை குறித்துச் சிந்திக்குமாறு வலியுறுத்த விரும்புகிறோம்.
இனிவரும் காலங்களிலாவது அரசியல்வாதிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்ற நிறுவனமாக அல்லாமல் சுஹதாக்கள் குடும்ப நலன்களை முன்னிறுத்திப் பாடுபடுகின்ற நிறுவனமாக "முஸ்லிம் தேச சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம்' செயற்படும் என நம்புகிறோம்.

2010 ஆம் ஆண்டில் அனுஷ்டிக்கப்படவிருக்கின்ற 20 ஆவது ஷûஹதாக்கள் தினமாவது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விடியலைக் கொண்டு வருவதற்கான ஒருநல்ல நாளாக அமைய வேண்டும். அந்த இலக்கை நோக்கி "சுஹதாக்கள் நிறுவனம்' நகருமா?


(பிந்திக் கடைத்த தகவல்: இந்த வருடம் சுஹதாக்கள் தின நிகழ்வுகளை பள்ளிவாயலில் மாத்திரம் நடத்துமாறும் கடைகளை மூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் காத்தான்குடி பொலிசார் காத்தான்குடி ப.மு.நி.சம்மேளனத்திடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர். இதனையடுத்து 2ம் திகதி இரவு சம்மேளனம் கடைகளைத் திறக்குமாறு பள்ளிவாயல் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவித்துள்ளது.

இதற்கு பொலிசார் சொன்ன காரணம்தான் விசித்திரமானது. ""உங்கள் பள்ளியில் சுட்ட புலிகள்அழிக்கப்பட்டுவிட்டார்கள். அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் அமைச்சர்களாகி விட்டார்கள். இனி எதற்கு சுஹதாக்கள் தினம்?என்று கேட்டார்களாம்.

இருப்பினும் சுஹதாகக்ள் தினத்தன்று கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பாடசாலைகள் வழமைபோன்று நடைபெற்றன.
புலிகளை அழிக்கலாம்..புலிகள் நமக்குச் செய்த கொடூரங்களை நமது மக்களின் மனங்களில் இருந்து அழிக்கலாமா என்ன..?
கவனம்...அடுத்த வருடம் சுஹதாக்கள் தினத்துக்கு வந்து முதலாம் குறிச்சிப் பள்ளியின் சுவர்களிலுள்ள ஓட்டைகளை அடைத்து விடுங்கள் என்பார்கள்...அதையும் கேட்டு நம்மவர்கள் தலையாட்டாமல் இருந்தால் சரி..

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி காத்தான்குடி முஸ்லிம்கள் மீதான பாசிசப் புலிகளின் அகோரத்தாண்டவம் நடைபெற்று 19 ஆண்டுகள் நிறைவடைந்திருகின்றன. புலிகளை கூண்டோடு அழித்து விட்டு, கடந்த மூன்று தசாப்தங்களுக்குமேலான யுத்தத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இரு சிறுபாண்மை சமூகங்களுக்குமான (தமிழ், முஸ்லிம்) உரிய தீர்வுகள் இதுவரையில் முன்வைக்கப்படாத நிலையில் அரசாங்கம் நடைபோட்டுக்கொண்டிருக்க, இரண்டாம் சிறுபாண்மை இனமான முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு மிகக் கவனமாக திட்டமிட்டு தன்செயற்பாடுகளை நகர்த்திக்கொண்டிருக்கும் பேரினவாத சக்திகள் மறுபுறமிருக்க, பள்ளியில் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை எதுவித காரணங்களுமின்றி சுட்டு வீழ்திய கறைபடிந்த இரவை நினைவுகூரும் 19 வது ஆண்டு நிகழ்வுகளை பள்ளிவாயல்களில் மாத்திரம்தான் நடாத்தவேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகளுக்கு அவசியமில்லை என்றும் பொலிசார் கூறியிருப்பதானது அநியாயமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை மறுதளிப்பதாகவே அமைந்திருக்கிறது. இதற்கு எமது சமூகத்தின் பொறுப்பு வாய்ந்தவர்கள் மறுப்புத்தெரிவித்து, இவ்வாறான நிகழ்வுகளுக்கான நியாயப்பாடுகளை பொலிசாருக்கு விளக்குவதை விடுத்து அதனை ஏற்றுக்கொண்டதைப்போல் செயற்பட்டிருப்பது எதிர்கால அனுஷ்டானங்களுக்கும், இதில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கான உதவிகளை இல்லாதொழிப்பதற்கும் வழிவகுப்பதாகவே அமைந்திருக்கிறது. கிழக்கில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இனச்சுத்திகரிப்புகளனைத்தையும் தலைமை தாங்கி நடாத்திய புலிகளின் முன்னாள் கிழக்குத்தளபதி கருணா அம்மானை (தற்போதய ஆளும் தரப்பு அமைச்சர்) ஊருக்கழைத்து விருந்து பரிமாறும் எமது முஸ்லிம் தலைமை(?)கள், பள்ளிவாயல் படுகொலையில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பதில் அக்கறை செலுத்தாமலிருப்பது கவலைக்குரியதாகும். மேலும் இதற்காகவே பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டதாயிருக்கின்ற முஸ்லிம் தேச சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் இவ்வரசியல் தலைமைகளோடு அள்ளுண்டுபோவதும் விசனத்திற்குரியதாகும். இனிவரும் காலங்களில் இஞ்ஞாபகர்த்த நிறுவனமானது தன் சேவைகளை திட்டமிட்ட அடிப்படையில் சுயாதீனமாக மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

    ReplyDelete
  2. Dear Mr. Fairooz,
    Salamullahi Alaikum,

    You should know that; many people are watching you and your good deeds, please do more and more efforts to our community, and learn more the way which can lead you towards perfectness.
    Thanks,
    One of your reader,.
    Wassalam.

    ReplyDelete