Wednesday, July 29, 2009

பலிபீடமாக மாறிய பள்ளிவாயல்!




ஜேர்மனியில் நீதிமன்றினுள் வைத்து முஸ்லிம் பெண் ஒருவரை யூத இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் குறித்து சில வாரங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளிலிருந்து மீள்வதற்கிடையில், இலங்கையின் பேருவளையில் பள்ளிவாசல் ஒன்றினுள் வைத்து முஸ்லிம்களை முஸ்லிம்களே வாள்களால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முனையாது கத்தியால் எதிர்கொள்ளத் துணிந்ததன் விளைவு இன்று இரு உயிர்களைப் பலியெடுத்து, 15 இற்கும் அதிகமானோரைக் காயப்படுத்தி, விலைமதிப்பிட முடியாத அல்லாஹ்வின் இல்லத்தை அடித்து நொருக்கித் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறது.
காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் பேருவளை பள்ளிவாயல் படுகொலை சம்பவம் நடந்திருப்பது கவலைக்குரியது.
இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்குமே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்ற இச்சம்பவம், இந்நாட்டின் மும்மொழி ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. அத்துடன் ஒவ்வொரு ஊடகங்களும் இதனை ஒவ்வொரு விதமாக அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றன.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே அல்லது முஸ்லிம் அமைப்புகளிடையே அவ்வப் போது முரண்பாடுகள் எழுவதும் ஈற்றில் அவை வன்முறைகளில் முடிவதும் வழமையானவைதான். இருந்த போதிலும் இறுதியாக பேருவளையில் இரு தரப்பினரிடையே தோன்றிய கருத்து முரண்பாடு பள்ளிவாயலினுள் வைத்தே ஒரு சகோதரனை இன்னொரு சகோதரன் படுகொலை செய்யுமளவு பாரதூரமாக மாறியமை இதுவே முதற்தடவையாகும்.

உண்மையில் அங்கு என்னதான் நடந்தேறியது?

பேருவளை மஹகொட, மாளிகாச்சேனையில் அமைந்துள்ள "பைதுல் முபாறக் அல் முஸ்தபவிய்யா புகாரி தக்கியா'வின் 130 ஆவது வருடாந்த புகாரி கந்தூரி வைபவத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த பள்ளிவாயல் வளாகத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பள்ளிவாயலுக்கு மிகச் சமீபமாகவே தற்போது தாக்குதலுக்கு இலக்கான "ஜம்இய்யதுல் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதியா' அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட "மஸ்ஜிதுர் ரஹ்மான்' பள்ளிவாயல் அமைந்துள்ளது.
கந்தூரி நிறைவுற்ற நாளுக்கு மறுதினமான வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுர் ரஹ்மானில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி ஒருவர், புகாரி தக்கியாவில் நடைபெற்ற கந்தூரி குறித்து கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனமே குறித்த வன்முறையின் தோற்றுவாயாக அமைந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி குத்பா நிறைவுற்று சில மணி நேரங்களின் பின்னர் அப்பகுதியில் சலசலப்பு தோன்றியுள்ளது. இரு தரப்பினதும் ஆதரவாளர்களிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 6 மணியளவில் "மஸ்ஜிதுர் ரஹ்மான்' பள்ளிவாயல் வளாகத்தினுள் பிரவேசித்த சிலர் பள்ளிவாயலுக்கு சிறியளவில் சேதத்தை விளைவித்து விட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து உடனடியாக பேருவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொலிஸார் இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இச்சம்பவத்துக்குப் பின்னர் இரு தரப்பினரிடையே பதற்ற நிலை அதிகரித்துள்ளது. சிலவேளைகளில் மோதல்களும் நிகழக் கூடும் என அஞ்சிய பிரதேசவாசிகளில் சிலர் மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் புகாரி தக்கியா முக்கியஸ்தர்களுக்கு இது குறித்து அறிவித்ததுடன் பிரச்சினையை நிதானமாகக் கையாளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் பொலிஸாருக்கும் இதன் அபாயத்தை தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயல் மீது தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என அஞ்சியதன் காரணமாக பள்ளிவாயலைப் பாதுகாக்கும் கடமையில் சுமார் 30 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் குறித்த இடத்திற்கு பொலிஸார் வந்து பாதுகாப்பு அளிப்பர் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடத்தில் இருந்தது. ஆனாலும் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரை பொலிஸார் அங்கு வரவில்லை. வந்ததோ சுமார் 500 பேருக்கும் அதிகமான குண்டர் படைதான். கையில் கத்திகள், வாள்கள் மற்றும் சில கூரிய ஆயுதங்களுடன் மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் பிரவேசித்த அவர்கள் கையில் அகப்பட்ட சகலரையும் முடியுமானவரை தாக்கினர். பெரும் கூட்டத்தைக் கண்டு தப்பியோடியவர்களைத் தவிர மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் நின்றிருந்த சகலருமே தாக்குதலுக்கு இலக்காகினர். பள்ளிவாயலின் மலசல கூட பகுதிக்குள் ஒளிந்திருந்த முஹம்மது முஹைதீன் ( 37) முஹம்மது மாஹிர் (30 ) ஆகிய இருவரும் ஸ்தலத்திலேயே கொலை செய்யப்பட்டனர். ஏனைய 15 இற்கும் அதிகமானோர் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு ஆளாகினர். அத்துடன் பள்ளிவாயலின் கதவுகள், யன்னல்கள், தளபாடங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாயல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் துவிச்சக்கர வண்டிகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளிவாயலுடன் இணைந்ததாக அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸாவும் மருத்துவ நிலையம் ஒன்றும் இதன்போது சேதமாக்கப்பட்டன.
இச்சம்பவத்தில் மரணமடைந்த இருவரினதும் ஜனாஸாக்கள் சனிக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டன. ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இதன்பின்னர் நல்லடக்கத்தில் கலந்துகொண்டோர் பேருவளை பொலிஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷமெழுப்பினர்.இதனையடுத்து அங்கு மீண்டும் பதற்ற நிலை தோன்றியதால் மஹாகொடை மற்றும் மாளிகாச்சேனை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலையும் பொலிசார் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.
இதற்கிடையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பலரை பொலிசார் கைது செய்தனர். சனிக்கிழமை காலை பேருவளை பகுதியிலிருந்து காலி பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றைத் தடுத்து நிறுத்திய பொலிசார் அதிலிருந்த 28 பேரை கைது செய்தனர். இறுதியாக இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை 131 பேர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேருவளை புகாரி தக்கியா நிருவாகத்தினர் மேற்படி பிரச்சினையை தூண்டிய மௌலவி குறித்து தாம் பொலிசில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதனாலேயே மக்கள் கொந்தளித்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
"மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி மக்களின் மனம் புண்படும்படி பேசினார். இது தொடர்பாக தக்கியாவைச் சேர்ந்த மௌலவிமாரும் சட்டத்தரணிகளும் பொலிசில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து குறித்த மௌலவியை இரண்டு மணித்தியாலங்களுக்குள் பொலிசில் ஒப்படைப்பதாக மஸ்ஜிதுர் ரஹ்மான் நிருவாகிகள் உறுதியளித்தனர். இருப்பினும் இது நடக்காததால் ஆவேசமடைந்த மக்கள் மஸ்ஜிதுர் ரஹ்மானை நோக்கிச் சென்றனர். அங்கு இரு தரப்பினரிடையேயும் கைகலப்பு நடந்தது.'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் மார்க்கத்தின் பெயரால் எழுந்த முரண்பாடு முழு முஸ்லிம் சமூகத்தையுமே வெட்கித் தலைகுனியச் செய்யுமளவு வன்முறையில் முடிந்திருக்கிறது.மார்க்க விவகாரங்கள் மற்றும் தஃவா பிரசாரங்கள் தொடர்பில் போதிய கள அனுபவமும் தெளிவான சிந்தனையுமற்றவர்களாலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி மார்க்க முரண்பாடுகள் தோற்றம் பெறுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இவ்வாறானதொரு அகோரம் நிகழ்ந்தேறிய பின்னரும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மார்க்கத்தின் பெயரால் பிளவுகளும் சண்டை சச்சரவுகளும் நிகழ்ந்தேறுவது அழகல்ல. அது நாம் பின்பற்றும் மார்க்கம் நமக்குக் காட்டித் தந்த வழிமுறையுமல்ல.

Monday, July 20, 2009

நம்ம 'தலைவரின்' விளையாட்டைப் பாருங்கோ...



Hakeem pulls out a trick to bag billiards title

By M.Shamil Amit

Member of Parliament, Sri Lanka Muslim Congress and Moors Sports Club member Rauf Hakeem clinched the Colombo District billiards title when he defeated his club mate A.H. Manoorjan in a close tussle in the final of the Colombo District Billiards Championship played at the Billiards and Snooker Association billiards table in Reid Avenue yesterday.
Hakeem who is participating in the Colombo district billiards tournament for the first time was in fine form as he kept his confidence and used his experience of his early round robin victories to overcome Manoorjan in a closely fought contest by 176 points to 153 in the one hour timing contest.
The Colombo district tournament is held along with tournaments in Kandy and Galle districts, in preparation for the forthcoming billiards nationals. After the completion of the district tournaments the Billiards and Snooker Association will conduct the All Island Lanka Plate which is scheduled to be played from July 22 to 25.
The All Lanka Plate will be contested by 38 cueists comprising 16 from Colombo district, eight each from Kandy and Galle along with the six players relegated cueists from the national championship of last year.
The billiards nationals are due to get underway from July 29 onwards with the final slotted to be played on August 6.
Results:
Quarter Finals – Rauf Hakeem (MSC) beat K.W.A. Ratnasiri (YMBA) (158/104). N.M. Shamil (RSS) beat O.Sirajudeen (YMBA) (194/178). A.N. Manoorjan (MSC) beat A.N. Mohamed (AAC) (190/101). Pawan Santani (OAC) beat W.M. Naushad (The Cue) (203/137).
Semi Finals – Rauf Hakeem (MSC) beat N.M. Shamil (RSS) (153/129). A.H. Manoorjan (MSC) beat Pawan Santani (OAC) (198/156).
Final – Rauf Hakeem (MSC) beat A.H. Manoorjan (MSC) (176/153).
Third place play off – Pawan Santani (OAC) beat N.M. Shamil (RSS) (84/10).
Courtsey: Dailymirror

Wednesday, July 15, 2009

மர்வா அல் ஷெர்பினி: 'நீதி'யின் முன் 'அநீதி'யிழைக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்!


நீதிமன்றில்....
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?


இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக பதினைந்து நாட்களுக்கு முன் (ஜூலை 01) ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.

"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.

தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.

திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர.

அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.

உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?

ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?

ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?

மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் "முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல் ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?

Sunday, July 12, 2009

பயப்படாதீங்க..சும்மா விளையாட்டுத்தான்..

An ethnic Uighur girl point her toy pistol at another boy in a Muslim Uighur neighbourhood of Urumqi in. China's Xinjiang Autonomous Region July 10, 2009. Security forces have imposed control over Urumqi, but the afternoon prayers on Friday were testing the government's ability to contain Uighur anger after Han Chinese, China's predominant ethnic group, attacked Uighur neighbourhoods on Tuesday (Reuturs)

Thursday, July 9, 2009

எங்களைக் காப்பாற்றுங்கள்...


சீனாவில் சிறுபான்மையாக வாழ்கின்ற 'உய்கர்' இன முஸ்லிம்கள் மீது சீனாவிள் 'ஹான்' இனத்தவர் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகளில் இது வரை சுமார் 200 முஸ்லிம்கள் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா எனக் கேட்கும் உய்கர் மக்களின் அழுகுரல் முஸ்லிம் நாடுகளின் காதுகளில் விழுந்ததாக இதுவரை தெரியவில்லை.

A young Turk holds a poster made of a photo of the recent killings in Urumqi, the capital of China's Uighur region, during a protest near the Chinese embassy in Ankara, Turkey, Wednesday, July 8, 2009

A Uighur woman alerts a Uighur neighborhood for an alleged attack by Han Chinese in Urumqi, China, Wednesday, July 8, 2009.


Chinese soldiers are seen inside the Grand Bazaar in the Uighur area of the city of Urumqi in China's far west Xinjiang province on July 8, 2009


A Uighur woman cries as reporters visit a Uighur district which protested on Monday in Urumqi, western China's Xinjiang province, Thursday, July 9,




A Uighur protestor shout slogans against China as he takes part in a demonstration condemning the violence in China's Xinjian Uighur region

சொல்ல மறந்த கதை




கிண்ணியாவிலிருந்து திருகோணமலை நகருக்கு கடல் வழியாக "பாதை'யில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

பச்சை சேட்,சாரன், வெள்ளைத் தொப்பி அணிந்து கையில் ஒரு பையுடனும் குடையுடனும் "பாதை'யின் இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த அந்த வயோதிபர் நம் கண்களில் படுகிறார். கிட்டநெருங்கி பேச்சுக் கொடுத்தோம்.

"அஸ்ஸலாமு அலைக்கும் நாநா...'' சிரித்தவாறே பதில் சொன்ன அவரிடம், ""நாங்க அம்பாறையிலிருந்தும் மாத்தறையிலிருந்தும் ஒங்கட ஏரியாவ சுத்திப் பார்க்க வந்திருக்கிறோம்'' எனச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே "என்னப் பத்தி மாத்தறை தினகரன் நிருபர் ஒரு செய்தி எழுதியிருக்கிறார் '' என முகம் மலர்ந்தவாறே பெரியவர் எம்முடன் கதைப்பதற்கு உஷாரானார்

"அப்படியா... என்ன செய்தி அது...?'' எனக் கேட்டதற்கு மூச்சு விடாமல் அந்த செய்தியை வாசித்து முடித்தார் அவர்.

"கிண்ணியா பூவரசந்தீவைச் சேர்ந்த வயோதிபரான ஜனாப் ஏ.எம்.இப்றாஹீம் என்பவர் தனது முச்சக்கர சைக்கிளில் தென்னிலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நாட்டில் பயங்கரவாதம் நிலவும் இக்காலப் பகுதியில் முச்சக்கர சைக்கிளில் பயணம் செய்ய வேண்டாம் என தனது உறவினர்களும், நண்பர்களும் கூறிய போதிலும் இவர் திடமான மனவுறுதியுடன் இந்த விஜயத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்தார். 1996.03.03. ஆம் திகதி திருகோணமலையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இவர் 1996.04.04 ஆம் திகதி கொழும்புக்கு வந்ததாகவும் கூறினார்.''

மாத்தறை தினகரன் நிருபரால் எழுதப்பட்ட தன்னைப்பற்றிய மேற்படி செய்தியை 12 வருடங்களின் பின்னரும் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் இந்தப் பெரியவரைப் பார்க்கையில் எமக்கு ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்தும் அவர் எம்மிடம் பேசினார்.

""நிறையப் பேர் சொன்னாங்க. நீங்க இந்த சைக்கிள்ல கொழும்புக்கு போக மாட்டீங்க என்டு. நான் போவேன் என்டு சவால்விட்டன். பேப்பர்ல என்ட பேரு வரும் என்டும் சொன்னன்.''

"கொழும்புக்கு சைக்கிள்ல போய் அமைச்சர் அஷ்ரபை சந்திக்க ட்ரை பண்ணினன். ஆனா அவர சந்திக்க முடியல.கொழும்புல உள்ளவங்க உதவி செய்வாங்க என்டு எதிர்பார்த்துதான் என்ட பயணத்த தொடங்கினன். ஆனா பெரிசா எந்த உதவியும் எனக்குக் கிடைக்கல... திரும்பி ஊருக்கே வந்துட்டன். ஊர் வந்து சேர ஒரு மாசம் எடுத்திச்சு. உதவிதான் கிடைக்காட்டியும், விட்ட சவால்ல வெற்றி கண்டுட்டோம் என்ட மகிழ்ச்சி இப்பவும் இருக்கு. பேப்பர்ல பேரு வந்தத நினைச்சா இப்பவும் சந்தோஷம்தான்...''

கால்கள் சுகவீனமான நிலையில் முச்சக்கர சைக்கிளில் கொழும்புக்குச் சென்று சாதனை படைத்த இப்றாஹீம் நாநாவிடம் உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் எனக் கேட்டோம்.

"நான் பிறந்தது யாழ்ப்பாணத்துல. என்ட தகப்பன்ட பெயர் பொன்னுத்துரை செட்டியார். என்ட தாயும் தகப்பனும் சின்ன வயசுலயே இறந்துட்டாங்க...நான் சின்ன வயசுலயே இஸ்லாத்துக்கு வந்தவன். அன்டையிலருந்து இன்டைக்கு வரைக்கும் அதே கொள்கையிலதான் நடக்கிறன்... திருகோணமலைக்கு வந்துதான் கலியாணம் முடிச்சது. எனக்கு 4 பிள்ளைகள். ஒரு பொம்புளப் புள்ளயும் இருக்கு....'' என்ற அவரிடம்...

"சரி ஒங்கட தொழில் என்ன?'' எனக் கேட்டதற்கு... "நான் கிண்ணியா துறையடி தைக்கியா, றகுமானியா பள்ளி, நடுப் பள்ளி, காக்காமுனை பள்ளி என்டு நிறைய பள்ளிவாசலுகள்ல மோதினாரா கடமை செஞ்சிருக்கன். இப்ப ஒன்டுக்கும் ஏலா... இருக்கிறதுக்கும் இடமில்ல... அங்கயும் இங்கயுமா அலஞ்சு திரிகிறன்'' என்றார் பெரும் சலிப்போடு. இப்பொழுது 78 வயதாகும் இப்றாஹீமுக்கு ஒரு காலால் நடக்க முடியாது. இப்றாஹீம் நாநா தன்னை ஒரு சாதனை வீரனாகவே கருதிக் கொள்வது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் பெருமிதம்தான்.

உங்களுக்குத் தெரியுமா? பாகிஸ்தானிலும் அகதிகள் இருக்கிறார்கள் என்று?





































மீண்டும் 'ஜிஹாத்' காய்ச்சல்!



டெங்குக் காய்ச்சல், எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பற்றி பெரும்பாலான ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்க ஒரு சில சிங்கள, ஆங்கில பத்திரிகைகளுக்கும் இணையத் தளங்களுக்கும் மாத்திரம் "ஜிஹாத் காய்ச்சல்' பிடித்திருக்கிறது.
"கிழக்கில் ஜிஹாத்'' எனும் பெயரில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இயங்குகின்றன. அவர்கள்தான் அங்கு நடைபெறும் குற்றச் செயல்களுக்குக் காரணமாக அங்கு இருக்கிறார்கள். புலிகளை ஒழித்தாயிற்று. இனி இவர்களைத்தான் ஒரு கை பார்க்க வேண்டும்...'' என்றெல்லாம் இந்த ஊடகங்கள் புதிய கதைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.

ஜூன் 21ம், 28ம் திகதிகளில் வெளிவந்த "லக்பிம நியூஸ்' ஆங்கில வார இதழின் செய்திகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய நிலையில், தற்போது கிழக்கில் இயங்கிவரும் ஜிஹாத் ஆயுதக் குழுக்கள் மீது அரசாங்கம் கவனத்தைச் செலுத்தியுள்ளது. புலனாய்வுத் தகவல்களின் படி கிழக்கில் 500 ஜிஹாத் ஆயுததாரிகள் உள்ளனர். கிழக்கில் நடைபெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் இவர்களே இருக்கின்றனர். 15 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழுக்களுக்கு முஸ்லிம் தலைவர்களே உதவியும், பாதுகாப்பும் அளித்து வருகின்றனர். தற்போது புத்தளத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல் வாதிகளும் இந்த ஆயுதக் குழுக்களுக்கு பணமும், ஆயுதமும் வழங்குவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் இந்த ஜிஹாத் ஆயுததாரிகள் கொழும்பில் இயங்கிவரும் முஸ்லிம் பாதாளக் குழுக்களுக்கும் ஆயுதங்களை விநியோகித்து வருகின்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று கல்முனை, மூதூர், கிண்ணியா ஆகிய பிரதேசங்களிலேயே இந்தக் குழுக்கள் இயங்குகின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா அணியினரிடமிருந்து இந்தக் குழுக்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்துள்ளன. இவ்வாறான 13 குழுக்கள் கிழக்கில் இயங்கி வருகின்றன. ஜிஹாத், உஸாமா, முஜாஹித் என்பன அவற்றில் சிலவற்றின் பெயர்களாகும். முஸ்லிம் அரசியல்வாதிகளே இந்த ஆயுதக் குழுக்களின் இருப்புக்கு உதவி வருகின்றனர். சில அரசியல்வாதிகள் தமது சொந்த அரசியல் நலன்களுக்காக இவர்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள். இவற்றில் சில குழுக்களை முஸ்லிம் வியாபாரிகளும், ஹாஜியார்மார்களும் நடத்தி வருகின்றனர்.''

லக்பிம நியூஸின் மேற்படி செய்தியைத் தழுவி "இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையத்தளம் வெளியிட்ட தகவல் பின்வருமாறு அமைந்திருந்தது.

"இந்திய அதிகாரிகளின் தகவல்படி, இலங்கையிலும் இந்தியாவிலும் ஜிஹாத் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான்போன்ற வெளிநாடுகளின் நிதியுதவி மற்றும் ஆலோசனைக்கிணங்க செயற்பட்டுவரும் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களைக் கண்டுபிடிக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் காணிப்பிரச்சினையை முன்னிறுத்தி தமிழர்களுக்கும் ஜமாஅத்தினருக்குமிடையில் ஆயுத மோதலைத் தோற்றுவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.''

ஜூன் 28ஆம் திகதி வெளிவந்த "லங்காதீப' பத்திரிகையில் "காத்தான்குடிப் பிரதேசத்தில் 18 ஆயுதக் குழுக்கள் இயங்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பெருந்தொகையான ஆயுதங்களைக் கொண்டுள்ள இக்குழுக்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, நாட்டில் அமைதி நிலவிக் கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில் இந்த ஊடகங்களுக்கு ஏன் மீண்டும் "ஜிஹாத் காய்ச்சல்' தொற்ற வேண்டும்?கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டு அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கின்ற நிலையில் அங்குள்ள சட்டவிரோத ஆயுதங்களைக் களைவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த 19.06.2009 அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர். காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பதில் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக, கிழக்கு மாகாண பாதுகாப்புப்படை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஸ்ரீநாத் ராஜபக்­, விஷேட அதிரடிப்படை பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட மேற்படி அதிகாரிகள் முஸ்லிம் பிரதேசங்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத ஆயுதப் பாவனை அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆயுதங்களை உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் ஜூலை 2 ஆம் திகதிக்கு முன்னர் தாமாக வந்து ஆயுதங்களைக் கையளிப்போருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும், பள்ளிவாசல்கள் ஊடாக பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கலாம் எனவும் மேற்படி அதிகாரிகள் குறிப்பிட்டனர்.உண்மையில், குறித்த பிரதேசங்களில் பாவனையிலுள்ள சட்டவிரோத ஆயுதங்கள் குறித்தே பாதுகாப்புத் தரப்பினர் மேற்படி கூட்டத்தை ஒழுங்கு செய்ததுடன், மேற்படி அறிவித்தலையும் விடுத்தனர். மாறாக, எந்தவொரு இடத்திலும் கிழக்கிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதக்குழுக்கள் இயங்குகின்றன என்றோ அல்லது "ஜிஹாத்' எனும் பெயரில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இருக்கின்றன என்றோ குறிப்பிட்டிருக்கவில்லை.

இந்நிலையில், மேற்படி நிகழ்வையும், அறிவித்தலையும் வேண்டுமென்றே தவறாக அர்த்தப்படுத்தி தமது ஊடகங்களின் மீது கவனயீர்ப்பைப் பெற வேண்டுமென்பதற்காகவே குறித்த ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.

புலிகள் அழிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டிலுள்ள எல்லா ஊடகங்களும் செய்திப் பஞ்சத்தில் தவிக்கின்றன என்பது உண்மைதான். அதற்காக இல்லாத ஒன்றை எழுதி ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழியைப் போடுகின்ற இந்த செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கையில் இன முரண்பாடு இந்தளவு தூரம் கூர்மை பெறுவதற்கு நாட்டின் தமிழ், சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள் பெரும் பங்கு வகித்திருக்கின்றன என்பதில் முVற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால், யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இனங்களிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என சகலரும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஊடகங்கள் இவ்வாறு நடந்து கொள்வது கவலையளிக்கிறது.

தமிழர்களை சிங்களவர்களும், சிங்களவர்களை தமிழர்களும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் வகையிலான ஒரு விரும்பத்தகாத சூழலை ஊடகங்களே இந்நாட்டில் ஏற்படுத்தின. அதனைத்தான் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மீது தோற்றுவிப்பதற்கு இவ் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இந்நிலையில் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அரசியல் மற்றும் சமூகத் தலைமைகளின் கடமையாகும்.

இந்த நாட்டில் 45.000 இற்கும் மேற்பட்ட சட்ட விரோத ஆயுதங்கள் புழக்கத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு கிழக்கு மாகாணமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில், சட்டவிரோத ஆயுதங்கள் முஸ்லிம் பகுதிகளிலும் புழக்கத்தில் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் குழுவாகப் பயன்படுத்தப்பட்டன என்பதில்தான் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன.

சர்வதேச நாடுகளில் உள்ளதைப் போல் போன்றதோ அல்லது இலங்கையில் தோன்றிய சிங்கள, தமிழ் ஆயுதக் குழுக்களைப்போன்றோ இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் எந்தவொரு கோரிக்கையும் முன்னிறுத்திப் போராடுவதற்கான ஆயுதக் குழுக்கள் தோற்றம் பெற்றிருக்கவில்லை.

பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் அரசுடன் இணைந்து பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க போராடினார்களே தவிர, இந்த நாட்டு அரசுக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவில்லை.இந்நிலையில், இந்த நாட்டில் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு முஸ்லிம் இளைஞர்கள் வழங்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டுவதை விடுத்து, அவர்களை இந்த நாட்டின் துரோகிகளாக சித்தரிக்க முனைவதும், முஸ்லிம் சமூகத்தின் மீது சிங்களவர்களும், தமிழர்களும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் சூழ்நிலையைத் தோற்றுவிப்பதும் விசனத்துக்குரியது.

எனவேதான், இந்த ஊடகங்களின் தவறான அறிக்கையிடல் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவூட்டும் பிரசாரங்களை கிழக்கு மாகாணத்திலுள்ள சமூக நல அமைப்புக்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இன நல்லுறவை சீர்குலைக்க முற்படும் இவ்வாறான ஊடகங்களைத் தோலுரித்துக் காட்டி, முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும். அன்ரன் பாலசிங்கமும், கிங்ஸ்லி ரொட்ரிகோவும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் குறித்து கருத்து வெளியிட்டபோது எவ்வாறு நாம் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி அவர்களது கருத்துக்களை பிழை என்று ஏற்க வைத்தோமோ அதேபோன்று சமகாலத்திலும் அனைவரும் ஒருமித்துக் குரலெழுப்ப வேண்டும். இல்லையேல், இன நல்லுறவு துளிர் விடத்தொடங்கும் இக்காலப் பகுதியில் அதற்கான சந்தர்ப்பத்தை நாம் தவறவிட வேண்டியேற்படும்.


Saturday, July 4, 2009

நனவாகுமா எங்கள் பூர்வீகம் மீளும் கனவு ?


அண்மைய போர்ச் சூழல் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் 3 இலட்சம் தமிழ் அகதிகள் குறித்து உலகமே பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில் சுமார் 19 வருடங்களாக அகதி முகாம்களிலேயே காலத்தைக் கடத்திவரும் வடமாகாண முஸ்லிம்கள் குறித்து யாருமே கவலையற்றிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்தும் வடமாகாணத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் 1990 இல் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட சுமார் 1 இலட்சம் முஸ்லிம்கள் இன்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.

விடுதலைப் புலிகள் தங்களை வெளியேற்றிய விதத்தை இப்படி நினைவு கூருகின்றார் ஒரு பெரியவர்:
"1990 ஒக்டோபர் 27 இல் நாங்கள் வெளியேற்றப்பட்டோம். கடந்த 18 வருடங்களாக கடும் துன்பங்களுடன்தான் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மீண்டும் எங்களது சொந்தக் கிராமத்தில் மீளக்குடியேறி தமிழ் மக்களுடன் பிட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழவேண்டும் என்று கனவு கண்ட வண்ணமிருக்கிறோம். இன்று அதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. தமிழ் மக்கள் எங்களின் எதிரியல்ல. தமிழ் மக்களுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். இனி இந்த நாட்டில் யுத்தப் பிரச்சினையே இருக்கக் கூடாது. எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழக் கூடிய சாத்தியக் கூறுகளைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'' எனக் கூறும் அவர் இந்த 18 வருட காலத்தில் அரசாங்கத்தின் சார்பாக தமக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

தற்போது விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டது இவர்களில் பலருக்கு மகிழ்ச்சியைத் தோற்றுவித்துள்ள போதிலும் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பச் செல்ல முடியுமா என்பதில் இந்த மக்கள் இன்னமும் நம்பிக்கையற்றே இருக்கின்றனர்.

"எல்.ரி.ரி.ஈ தோற்கடிக்கப்பட்டது ஒரு வகையில எங்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அதிலும் எங்களின் தாயகப் பகுதியில் எங்களை மீள்குடியேற்றுவதற்கான சூழல் எங்களுக்கு மகிழ்ச்சியத் தருகிறது. எங்கள் சமூகத்திற்கான சகல பாதுகாப்பு உத்தரவாதமும் அளிக்கப்படுமானால் நாங்கள் மீளக் குடியமர்வதில் எந்த ஆட்சேபனையுமில்லை'' என்றும் அந்தப் பெரியவர் குறிப்பிடுகிறார்.

இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மீளக் குடியமர்வது குறித்த அம்மக்களின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறார் சுஜான் எனும் இளைஞர்.

"சிலர் மீளக் குடியேறுவதந்கான சாத்தியம் இருக்கிறதுதான். ஆனாலும் சிலர் போகமாட்டார்கள்.ஏனெனில் அங்கு எல்லோருக்கும் குடியிருப்பதற்கான இட வசதிகள் இல்லை. அவ்வாறானவர்கள் போக மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். சிலருக்கு அங்கு இடங்கள் இருந்தும் வீடு வாசல்கள் இல்லை. அதனால் திடீரெனப் போவது சாத்தியமில்லை. அங்கு தொழில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமானால் சிலர் அங்கு திரும்பிச் செல்ல முடியும்.இங்குள்ள சொத்துக்களை விட்டுவிட்டு எவரும் இலகுவில் போகமாட்டார்கள். ஏனெனில் எல்லோரும் சொப்பிங் பேக்குடன்தான் வந்தவர்கள். அப்பிடியிருந்துதான் இன்று வரைக்கும் குருவி சேர்ப்பதுபோல் சேர்த்து வீடு வாசல் கட்டியிருக்கிறார்கள். அதனால இதை விட்டுவிட்டுப்போகும் நிலை வராது. இருப்பினும் நஷ்டஈடுகள் ஏதாவது வழங்கப்படுமானால் இங்குள்ளவர்களில் 50 வீதமானோர் மீளக்குடியமர்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன'' என்கிறார் அந்த இளைஞர்.

இங்கு நாம் சந்தித்த ஒரு பெண் தான் திரும்பிச் செல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டார். நான் திரும்பிப் போகத்தான் விரும்புறன். இங்கு நிலவும் சூழல் சரியில்øல. எங்களுடைய சொந்த ஊருக்குச் செல்வதற்குத்தான் போகத்தான் நாங்க ஆசைப்படுகிறோம் என்றார் அப் பெண்.
தான் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்ததாகக் குறிப்பிடும் அவர் இறுதியாக 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டைப் பார்த்து விட்டு வந்ததாகவும் தெரிவிக்கின்றார்.

இந்த மக்கள் இடம்பெயர்ந்து சுமார் இரண்டு தசாப்தங்கள் ஆகின்ற நிலையில் இந்த அகதி முகாம்களில் ஒரு புதிய தலைமுறையே பிறந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். சிறு குழந்தையாக இங்கு வந்த ஸவானா தற்போது இரு குந்தைகளுக்குத் தாயாக இருக்கிறார். இவருடைய தாய் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிச் செல்வதற்கு முடிவெடுத்திருந்தாலும் இவர் புத்தளத்திலேயே தொடர்ந்தும் தங்குவது எனத் தீர்மானித்திருக்கிறார்.
"எனக்கு யாழ்ப்பாணம் என்றால் என்னவென்றே தெரியாது. சின்ன வயதில் இடம்பெயர்ந்தேன். அதனால் அங்கு போவதற்கு விருப்பமில்லை. எங்கள் உம்மா போவார். நான் இங்குதான் இருக்க விரும்புகிறேன்.'' என்கிறார் ஸவானா.

புத்தளத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கிருக்கும் சில வீடுகள் கல் வீடுகளாகக் காணப்பட்டாலும் பல குடிசை வீடுகளும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு கிளிநொச்சிக்கு சென்று ஹோட்டல் ஒன்றைத் தொடங்கிய ஸெய்யித் அஹமட் அக்பர் தற்போது தான் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை இப்படி விபரிக்கிறார்.
"நாங்கள் இடம்பெயர்வதற்கு முன்னர் தாஜ் மஹால் ஹோட்டல் எனும் பிரபலமான ஹோட்டல் ஒன்றை நடத்தினோம். பின்னர் சமாதான காலத்தில் அங்கு திரும்பிச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டோம். அதனால் பிரச்சினையில் மாட்டிக் கொண்டோம். கடைசியாக இந்த வருடம் முதலாம் திகதிதான் இங்கு திரும்பி வந்தோம்.வரும்போது உடுத்த உடையோடுதான் வந்தோம். நாங்கள் வரும்போது பிரச்சினை பெரிதாக உக்கிரமடையவில்லை. நான் இங்கு திரும்பி வந்தபின்னர் என்னுடைய 2 பிள்ளைகளை புலிகளோடு தொடர்பு வைத்திருந்தார்கள் எனக் கூறி பொலிசார் கைது செய்தனர். கடந்த 6 மாதங்களாக எந்த விசாரணையுமில்லை. எங்களுக்கு இங்கு எந்த தொழில்வாய்ப்புமில்லை. நாங்கள் அங்குதான் திரும்பிச் செல்ல வேண்டும் .அவ்வாறு நாங்கள் போவதென்றால் எங்களுக்கு நிரந்தரமானதொரு தீர்வை வழங்க வேண்டும்.''என்றார்.

முஸ்லிம்களான உங்கள் பிள்ளைகளை ஏன் புலிகள் என்று கூறி கைது செய்தார்கள்?எனக் கேட்டதற்கு "அங்குள்ள பாடசாலைகளில்தான் எங்கள் பிள்ளைகள் படித்தார்கள். என்னுடைய ஒரு மகளுக்கு சிங்களம் தெரியும். பிரச்சினையே அதுதான். அவருக்கு சிங்களம் தெரியும் என்பது தெரிந்தவுடன் அவரை ஒரு சிங்கள அறிவிப்பாளராகப் பணிபுரிவதற்காக புலிகள் அழைத்துச் சென்றார்கள். நாம் எவ்வளவு கூறியும் அவர்கள் விடவில்லை. அவரை வைத்து அவர்கள் சிங்களமும் படித்தார்கள். பின்னர் என்னுடைய மகள் சுகவீனமுற்றதன் காரணமாக அவரை விட்டு விட்டார்கள். அங்கு ஒரு அரசாங்கம் இருந்ததது.அவர்கள் சொல்வது போல்தான் நாங்கள் செய்ய வேண்டும். நாங்கள் உழைத்தால் அவங்களுக்கு வரி கட்ட வேண்டும். வரி கொடுக்காமல் நாங்கள் இருக்க முடியாது. இங்கு வந்த பின்னர் எனது மகளும் மகனும் புலிகளுக்கு உதவியதாகக் கூறி பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்கள் இப்போது பூசா முகாமில இருக்கிறார்கள். யாரிடம் போய் உதவி கேட்பது? யாருமே உதவி செய்ய முன்வருவதாகத் தெரியவில்லை.இதற்கிடையில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் பலர் கருதவில்லை என்றும் இதனால்தான் பலர் அங்கு சென்று மீளக் குடியேற அஞ்சுவதாகவும் குறிப்பிடுகிறார் வடமாகாண முஸ்லிம் முன்னணியின் தலைவர் முஹம்மது கபீர்.

"புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகின்றபோதிலும் அதில் சந்தேகம் கொள்கின்ற ஒரு சில மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் அரசாங்கம் சரியான பாதுகாப்பைத் தருமாக இருந்தால் அடுத்த நிமிடமே வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியமர்வதற்கு தயாராக இருக்கிறார்கள்'' என்கிறார் கபீர்.

இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும்பட்சத்தில் அவர்களின் நிலம் வீடு போன்றவற்றின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களைப் பெற அரசாங்கம் உதவும் என்கிறார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன். இவ்வாறு இடம்பெயர்ந்த 25,000 குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்கிறார் அவர். இதற்கிடையில், சமீபத்தில் வன்னியிலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் சுமார் 3 லட்சம் பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீள்குடியேற்ற நீண்ட நாட்களாகும் என்று கூறுகிறார்கள். இதற்கு முன்னர் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா? என அமைச்சரிடம் கேட்டதற்கு "அப்படியல்ல. முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதில் அரசாங்கம் ஆர்வமாக இருக்கிறது.இரண்டு மீள்குடியேற்றமும் முன்,பின் என்ற வேறுபாடுகளில்லை. மிதிவெடிகள் அகற்றப்பட்டவுடன் முதற்கட்டமாக நாங்கள் மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்கலாம். எல்லோரும் ஒரே பிரதேசத்திலேயே வாழ்ந்தவர்கள். எனவே அந்த மீள்குடியேற்றம்,இந்த மீள்குடியேற்றம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் நீண்ட கால அகதிகள். இவர்கள் அண்மைக்கால அகதிகள். தமிழ் சகோதரர்களுடைய வீடுகள் அப்படி அப்படியே இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுடைய வீடுகள் அவ்வாறு அல்ல. 18 வருடங்களிலே பழுதடைந்த பல வீடுகள் இருந்த இடம் தெரியாமலே அழிந்துபோயுள்ளன. எனவே அவர்களது மீள்குடியேற்றத்தை திட்டமிட்ட முறையிலே செய்யவேண்டிய ஒரு தேவைப்பாடு இருக்கிறது.

நாம் சந்தித்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது வீடு மற்றும் காணிகள் தொடர்பான ஆவணங்களை தவறவிட்டுவிட்டதாகக் கூறுகின்றனர். அவற்றை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இது பற்றி என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டதற்கு "18 வருட கால அகதிகளுடைய மீள்குடியேற்றத்தை திட்டமிட்டு மேற்கொள்ள எண்ணியிருக்கிறோம். அதற்கான ஒரு ஆலோசனை சபையை நியமித்து இது சம்பந்தமாக ஆராய்ந்து அதனை நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தவிருப்பதால் இழந்த ஆவணங்கள்,நஷ்டஈடு, வீடுகள் கட்டுவது போன்ற எல்லா விடயங்களையும் நாங்கள் திட்டமிட்டுச் செய்ய எண்ணியிருக்கின்றோம். என்றார். அத்துடன், இடம்பெயர்ந்த பல பிரதேசங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வீடு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டமொன்றை உலக வங்கியின் உதவியுடன் இலங்கை அரசு தற்போது முன்னெடுத்து வருவதகாவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் குறிப்பிட்டார்.இதேவேளை விடுதலைப் புலிகளைப் பற்றிய அச்சம் தேவையில்லை என்கின்றார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான இமாம்.

"தாங்கள் செய்த தவறை தாங்களே ஒப்புக் கொண்ட நிலையில்தான் முஸ்லிம்கள் தொடர்பான புலிகளின் அணுகுமுறை இருந்தது. அதனைப் பொறுத்தவரையில் நான் நூற்றுக்கு நூறு வீதம் ஊர்ஜிதமாகச் சொல்வேன். எந்த விதமான அச்சமோ ஐயமோ கொள்ள வேண்டிய தேவை இல்லை. நிச்சயமாக என்னால் அதனை துணிந்து கூற முடியும்'' என்றார் முஹம்மது இமாம்.

(வடமாகாண முஸ்லிம் அகதிகள் தொடர்பாக 24.06.2009 அன்று ஒலிபரப்பான பி.பி.சி தமிழோசை பெட்டக நிகழ்ச்சியைத் தழுவியது)