Thursday, July 9, 2009

மீண்டும் 'ஜிஹாத்' காய்ச்சல்!



டெங்குக் காய்ச்சல், எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பற்றி பெரும்பாலான ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்க ஒரு சில சிங்கள, ஆங்கில பத்திரிகைகளுக்கும் இணையத் தளங்களுக்கும் மாத்திரம் "ஜிஹாத் காய்ச்சல்' பிடித்திருக்கிறது.
"கிழக்கில் ஜிஹாத்'' எனும் பெயரில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இயங்குகின்றன. அவர்கள்தான் அங்கு நடைபெறும் குற்றச் செயல்களுக்குக் காரணமாக அங்கு இருக்கிறார்கள். புலிகளை ஒழித்தாயிற்று. இனி இவர்களைத்தான் ஒரு கை பார்க்க வேண்டும்...'' என்றெல்லாம் இந்த ஊடகங்கள் புதிய கதைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.

ஜூன் 21ம், 28ம் திகதிகளில் வெளிவந்த "லக்பிம நியூஸ்' ஆங்கில வார இதழின் செய்திகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய நிலையில், தற்போது கிழக்கில் இயங்கிவரும் ஜிஹாத் ஆயுதக் குழுக்கள் மீது அரசாங்கம் கவனத்தைச் செலுத்தியுள்ளது. புலனாய்வுத் தகவல்களின் படி கிழக்கில் 500 ஜிஹாத் ஆயுததாரிகள் உள்ளனர். கிழக்கில் நடைபெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் இவர்களே இருக்கின்றனர். 15 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழுக்களுக்கு முஸ்லிம் தலைவர்களே உதவியும், பாதுகாப்பும் அளித்து வருகின்றனர். தற்போது புத்தளத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல் வாதிகளும் இந்த ஆயுதக் குழுக்களுக்கு பணமும், ஆயுதமும் வழங்குவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் இந்த ஜிஹாத் ஆயுததாரிகள் கொழும்பில் இயங்கிவரும் முஸ்லிம் பாதாளக் குழுக்களுக்கும் ஆயுதங்களை விநியோகித்து வருகின்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று கல்முனை, மூதூர், கிண்ணியா ஆகிய பிரதேசங்களிலேயே இந்தக் குழுக்கள் இயங்குகின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா அணியினரிடமிருந்து இந்தக் குழுக்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்துள்ளன. இவ்வாறான 13 குழுக்கள் கிழக்கில் இயங்கி வருகின்றன. ஜிஹாத், உஸாமா, முஜாஹித் என்பன அவற்றில் சிலவற்றின் பெயர்களாகும். முஸ்லிம் அரசியல்வாதிகளே இந்த ஆயுதக் குழுக்களின் இருப்புக்கு உதவி வருகின்றனர். சில அரசியல்வாதிகள் தமது சொந்த அரசியல் நலன்களுக்காக இவர்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள். இவற்றில் சில குழுக்களை முஸ்லிம் வியாபாரிகளும், ஹாஜியார்மார்களும் நடத்தி வருகின்றனர்.''

லக்பிம நியூஸின் மேற்படி செய்தியைத் தழுவி "இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையத்தளம் வெளியிட்ட தகவல் பின்வருமாறு அமைந்திருந்தது.

"இந்திய அதிகாரிகளின் தகவல்படி, இலங்கையிலும் இந்தியாவிலும் ஜிஹாத் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான்போன்ற வெளிநாடுகளின் நிதியுதவி மற்றும் ஆலோசனைக்கிணங்க செயற்பட்டுவரும் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களைக் கண்டுபிடிக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் காணிப்பிரச்சினையை முன்னிறுத்தி தமிழர்களுக்கும் ஜமாஅத்தினருக்குமிடையில் ஆயுத மோதலைத் தோற்றுவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.''

ஜூன் 28ஆம் திகதி வெளிவந்த "லங்காதீப' பத்திரிகையில் "காத்தான்குடிப் பிரதேசத்தில் 18 ஆயுதக் குழுக்கள் இயங்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பெருந்தொகையான ஆயுதங்களைக் கொண்டுள்ள இக்குழுக்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, நாட்டில் அமைதி நிலவிக் கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில் இந்த ஊடகங்களுக்கு ஏன் மீண்டும் "ஜிஹாத் காய்ச்சல்' தொற்ற வேண்டும்?கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டு அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கின்ற நிலையில் அங்குள்ள சட்டவிரோத ஆயுதங்களைக் களைவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த 19.06.2009 அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர். காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பதில் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக, கிழக்கு மாகாண பாதுகாப்புப்படை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஸ்ரீநாத் ராஜபக்­, விஷேட அதிரடிப்படை பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட மேற்படி அதிகாரிகள் முஸ்லிம் பிரதேசங்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத ஆயுதப் பாவனை அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆயுதங்களை உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் ஜூலை 2 ஆம் திகதிக்கு முன்னர் தாமாக வந்து ஆயுதங்களைக் கையளிப்போருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும், பள்ளிவாசல்கள் ஊடாக பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கலாம் எனவும் மேற்படி அதிகாரிகள் குறிப்பிட்டனர்.உண்மையில், குறித்த பிரதேசங்களில் பாவனையிலுள்ள சட்டவிரோத ஆயுதங்கள் குறித்தே பாதுகாப்புத் தரப்பினர் மேற்படி கூட்டத்தை ஒழுங்கு செய்ததுடன், மேற்படி அறிவித்தலையும் விடுத்தனர். மாறாக, எந்தவொரு இடத்திலும் கிழக்கிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதக்குழுக்கள் இயங்குகின்றன என்றோ அல்லது "ஜிஹாத்' எனும் பெயரில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இருக்கின்றன என்றோ குறிப்பிட்டிருக்கவில்லை.

இந்நிலையில், மேற்படி நிகழ்வையும், அறிவித்தலையும் வேண்டுமென்றே தவறாக அர்த்தப்படுத்தி தமது ஊடகங்களின் மீது கவனயீர்ப்பைப் பெற வேண்டுமென்பதற்காகவே குறித்த ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.

புலிகள் அழிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டிலுள்ள எல்லா ஊடகங்களும் செய்திப் பஞ்சத்தில் தவிக்கின்றன என்பது உண்மைதான். அதற்காக இல்லாத ஒன்றை எழுதி ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழியைப் போடுகின்ற இந்த செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கையில் இன முரண்பாடு இந்தளவு தூரம் கூர்மை பெறுவதற்கு நாட்டின் தமிழ், சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள் பெரும் பங்கு வகித்திருக்கின்றன என்பதில் முVற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால், யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இனங்களிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என சகலரும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஊடகங்கள் இவ்வாறு நடந்து கொள்வது கவலையளிக்கிறது.

தமிழர்களை சிங்களவர்களும், சிங்களவர்களை தமிழர்களும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் வகையிலான ஒரு விரும்பத்தகாத சூழலை ஊடகங்களே இந்நாட்டில் ஏற்படுத்தின. அதனைத்தான் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மீது தோற்றுவிப்பதற்கு இவ் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இந்நிலையில் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அரசியல் மற்றும் சமூகத் தலைமைகளின் கடமையாகும்.

இந்த நாட்டில் 45.000 இற்கும் மேற்பட்ட சட்ட விரோத ஆயுதங்கள் புழக்கத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு கிழக்கு மாகாணமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில், சட்டவிரோத ஆயுதங்கள் முஸ்லிம் பகுதிகளிலும் புழக்கத்தில் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் குழுவாகப் பயன்படுத்தப்பட்டன என்பதில்தான் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன.

சர்வதேச நாடுகளில் உள்ளதைப் போல் போன்றதோ அல்லது இலங்கையில் தோன்றிய சிங்கள, தமிழ் ஆயுதக் குழுக்களைப்போன்றோ இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் எந்தவொரு கோரிக்கையும் முன்னிறுத்திப் போராடுவதற்கான ஆயுதக் குழுக்கள் தோற்றம் பெற்றிருக்கவில்லை.

பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் அரசுடன் இணைந்து பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க போராடினார்களே தவிர, இந்த நாட்டு அரசுக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவில்லை.இந்நிலையில், இந்த நாட்டில் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு முஸ்லிம் இளைஞர்கள் வழங்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டுவதை விடுத்து, அவர்களை இந்த நாட்டின் துரோகிகளாக சித்தரிக்க முனைவதும், முஸ்லிம் சமூகத்தின் மீது சிங்களவர்களும், தமிழர்களும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் சூழ்நிலையைத் தோற்றுவிப்பதும் விசனத்துக்குரியது.

எனவேதான், இந்த ஊடகங்களின் தவறான அறிக்கையிடல் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவூட்டும் பிரசாரங்களை கிழக்கு மாகாணத்திலுள்ள சமூக நல அமைப்புக்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இன நல்லுறவை சீர்குலைக்க முற்படும் இவ்வாறான ஊடகங்களைத் தோலுரித்துக் காட்டி, முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும். அன்ரன் பாலசிங்கமும், கிங்ஸ்லி ரொட்ரிகோவும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் குறித்து கருத்து வெளியிட்டபோது எவ்வாறு நாம் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி அவர்களது கருத்துக்களை பிழை என்று ஏற்க வைத்தோமோ அதேபோன்று சமகாலத்திலும் அனைவரும் ஒருமித்துக் குரலெழுப்ப வேண்டும். இல்லையேல், இன நல்லுறவு துளிர் விடத்தொடங்கும் இக்காலப் பகுதியில் அதற்கான சந்தர்ப்பத்தை நாம் தவறவிட வேண்டியேற்படும்.


No comments:

Post a Comment