Wednesday, July 29, 2009

பலிபீடமாக மாறிய பள்ளிவாயல்!




ஜேர்மனியில் நீதிமன்றினுள் வைத்து முஸ்லிம் பெண் ஒருவரை யூத இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் குறித்து சில வாரங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளிலிருந்து மீள்வதற்கிடையில், இலங்கையின் பேருவளையில் பள்ளிவாசல் ஒன்றினுள் வைத்து முஸ்லிம்களை முஸ்லிம்களே வாள்களால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முனையாது கத்தியால் எதிர்கொள்ளத் துணிந்ததன் விளைவு இன்று இரு உயிர்களைப் பலியெடுத்து, 15 இற்கும் அதிகமானோரைக் காயப்படுத்தி, விலைமதிப்பிட முடியாத அல்லாஹ்வின் இல்லத்தை அடித்து நொருக்கித் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறது.
காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் பேருவளை பள்ளிவாயல் படுகொலை சம்பவம் நடந்திருப்பது கவலைக்குரியது.
இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்குமே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்ற இச்சம்பவம், இந்நாட்டின் மும்மொழி ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. அத்துடன் ஒவ்வொரு ஊடகங்களும் இதனை ஒவ்வொரு விதமாக அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றன.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே அல்லது முஸ்லிம் அமைப்புகளிடையே அவ்வப் போது முரண்பாடுகள் எழுவதும் ஈற்றில் அவை வன்முறைகளில் முடிவதும் வழமையானவைதான். இருந்த போதிலும் இறுதியாக பேருவளையில் இரு தரப்பினரிடையே தோன்றிய கருத்து முரண்பாடு பள்ளிவாயலினுள் வைத்தே ஒரு சகோதரனை இன்னொரு சகோதரன் படுகொலை செய்யுமளவு பாரதூரமாக மாறியமை இதுவே முதற்தடவையாகும்.

உண்மையில் அங்கு என்னதான் நடந்தேறியது?

பேருவளை மஹகொட, மாளிகாச்சேனையில் அமைந்துள்ள "பைதுல் முபாறக் அல் முஸ்தபவிய்யா புகாரி தக்கியா'வின் 130 ஆவது வருடாந்த புகாரி கந்தூரி வைபவத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த பள்ளிவாயல் வளாகத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பள்ளிவாயலுக்கு மிகச் சமீபமாகவே தற்போது தாக்குதலுக்கு இலக்கான "ஜம்இய்யதுல் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதியா' அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட "மஸ்ஜிதுர் ரஹ்மான்' பள்ளிவாயல் அமைந்துள்ளது.
கந்தூரி நிறைவுற்ற நாளுக்கு மறுதினமான வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுர் ரஹ்மானில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி ஒருவர், புகாரி தக்கியாவில் நடைபெற்ற கந்தூரி குறித்து கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனமே குறித்த வன்முறையின் தோற்றுவாயாக அமைந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி குத்பா நிறைவுற்று சில மணி நேரங்களின் பின்னர் அப்பகுதியில் சலசலப்பு தோன்றியுள்ளது. இரு தரப்பினதும் ஆதரவாளர்களிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 6 மணியளவில் "மஸ்ஜிதுர் ரஹ்மான்' பள்ளிவாயல் வளாகத்தினுள் பிரவேசித்த சிலர் பள்ளிவாயலுக்கு சிறியளவில் சேதத்தை விளைவித்து விட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து உடனடியாக பேருவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொலிஸார் இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இச்சம்பவத்துக்குப் பின்னர் இரு தரப்பினரிடையே பதற்ற நிலை அதிகரித்துள்ளது. சிலவேளைகளில் மோதல்களும் நிகழக் கூடும் என அஞ்சிய பிரதேசவாசிகளில் சிலர் மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் புகாரி தக்கியா முக்கியஸ்தர்களுக்கு இது குறித்து அறிவித்ததுடன் பிரச்சினையை நிதானமாகக் கையாளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் பொலிஸாருக்கும் இதன் அபாயத்தை தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயல் மீது தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என அஞ்சியதன் காரணமாக பள்ளிவாயலைப் பாதுகாக்கும் கடமையில் சுமார் 30 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் குறித்த இடத்திற்கு பொலிஸார் வந்து பாதுகாப்பு அளிப்பர் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடத்தில் இருந்தது. ஆனாலும் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரை பொலிஸார் அங்கு வரவில்லை. வந்ததோ சுமார் 500 பேருக்கும் அதிகமான குண்டர் படைதான். கையில் கத்திகள், வாள்கள் மற்றும் சில கூரிய ஆயுதங்களுடன் மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் பிரவேசித்த அவர்கள் கையில் அகப்பட்ட சகலரையும் முடியுமானவரை தாக்கினர். பெரும் கூட்டத்தைக் கண்டு தப்பியோடியவர்களைத் தவிர மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் நின்றிருந்த சகலருமே தாக்குதலுக்கு இலக்காகினர். பள்ளிவாயலின் மலசல கூட பகுதிக்குள் ஒளிந்திருந்த முஹம்மது முஹைதீன் ( 37) முஹம்மது மாஹிர் (30 ) ஆகிய இருவரும் ஸ்தலத்திலேயே கொலை செய்யப்பட்டனர். ஏனைய 15 இற்கும் அதிகமானோர் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு ஆளாகினர். அத்துடன் பள்ளிவாயலின் கதவுகள், யன்னல்கள், தளபாடங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாயல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் துவிச்சக்கர வண்டிகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளிவாயலுடன் இணைந்ததாக அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸாவும் மருத்துவ நிலையம் ஒன்றும் இதன்போது சேதமாக்கப்பட்டன.
இச்சம்பவத்தில் மரணமடைந்த இருவரினதும் ஜனாஸாக்கள் சனிக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டன. ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இதன்பின்னர் நல்லடக்கத்தில் கலந்துகொண்டோர் பேருவளை பொலிஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷமெழுப்பினர்.இதனையடுத்து அங்கு மீண்டும் பதற்ற நிலை தோன்றியதால் மஹாகொடை மற்றும் மாளிகாச்சேனை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலையும் பொலிசார் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.
இதற்கிடையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பலரை பொலிசார் கைது செய்தனர். சனிக்கிழமை காலை பேருவளை பகுதியிலிருந்து காலி பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றைத் தடுத்து நிறுத்திய பொலிசார் அதிலிருந்த 28 பேரை கைது செய்தனர். இறுதியாக இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை 131 பேர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேருவளை புகாரி தக்கியா நிருவாகத்தினர் மேற்படி பிரச்சினையை தூண்டிய மௌலவி குறித்து தாம் பொலிசில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதனாலேயே மக்கள் கொந்தளித்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
"மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி மக்களின் மனம் புண்படும்படி பேசினார். இது தொடர்பாக தக்கியாவைச் சேர்ந்த மௌலவிமாரும் சட்டத்தரணிகளும் பொலிசில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து குறித்த மௌலவியை இரண்டு மணித்தியாலங்களுக்குள் பொலிசில் ஒப்படைப்பதாக மஸ்ஜிதுர் ரஹ்மான் நிருவாகிகள் உறுதியளித்தனர். இருப்பினும் இது நடக்காததால் ஆவேசமடைந்த மக்கள் மஸ்ஜிதுர் ரஹ்மானை நோக்கிச் சென்றனர். அங்கு இரு தரப்பினரிடையேயும் கைகலப்பு நடந்தது.'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் மார்க்கத்தின் பெயரால் எழுந்த முரண்பாடு முழு முஸ்லிம் சமூகத்தையுமே வெட்கித் தலைகுனியச் செய்யுமளவு வன்முறையில் முடிந்திருக்கிறது.மார்க்க விவகாரங்கள் மற்றும் தஃவா பிரசாரங்கள் தொடர்பில் போதிய கள அனுபவமும் தெளிவான சிந்தனையுமற்றவர்களாலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி மார்க்க முரண்பாடுகள் தோற்றம் பெறுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இவ்வாறானதொரு அகோரம் நிகழ்ந்தேறிய பின்னரும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மார்க்கத்தின் பெயரால் பிளவுகளும் சண்டை சச்சரவுகளும் நிகழ்ந்தேறுவது அழகல்ல. அது நாம் பின்பற்றும் மார்க்கம் நமக்குக் காட்டித் தந்த வழிமுறையுமல்ல.

3 comments:

  1. இலங்கையில் தஃவா செய்யப் புறப்பட்ட அமைப்புகள் மிகப்பெரும்பாலும் தங்களின் பெயரையும் அமைப்பின் மதிப்பையும் மட்டுமே மானமெனக்கருதி அதற்காக உயிரையும் விட்டுக்கொள்கிறார்கள். நாங்கள் சிறு பராயத்தில் இஸ்லாம் பாட மெனப்படித்தது என்ன? O/L வரைக்கும் முன்னொரு காலத்தில் நடந்த யுத்தங்கள், எத்தனை குதிரைகள் இருந்தன,மரணித்தவர்கள் எத்தனை பேர் ?.. இத்தியாதி புள்ளி விபரங்கள், பின்னர் நிறைய நாடுகள் பிடிக்கப்பட்ட வரலாறுகள், இறுதியில் ஆறுதலுக்காக அதெல்லம் அவர்கள் விட்ட அரசியல் தவறுகள் என்று முடியும்... கடைசியில் முஸ்லிமல்லாத மக்கள் யுத்த எதிரிகள் போலவும், வெண்டுமென்ற் இறை நிராகரிப்பளர்கள்.. போர் புரியத்தக்கவர்கள் போலவும் ஒரு மனப்பான்மை.. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும் றப்பு என்பதால் ஒரு பிரச்சினைக்குரிய சமூகமாக மற்றவர்கள் நமது மனதிற்குள் வந்துவிடுகிறார்கள்.அரபு மதரசாக்களில் படிப்பவர்களைத்தவிர்த்து, ஓரளவில் தங்களை இஸ்லாம் கற்பதோடு இணைத்துக்கொண்டவர்களிடம் உள்ள இறை நிராகரிப்பு,அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் பற்றிய புரிதல் அபாயகரமானதாகிறது. இவர்களிடத்தில் இலங்கையில் உள்ள மாற்றுக் கருத்து சகோதரனும், மக்கா காலப்பிரிவில் முஃமீன்களோடு ஆயுதம் கொண்டு பொருதியவனும் சமனாக இருக்கிறார்கள்.. கருதுப்பகிர்வு, உரையாடல் போன்ற அமைதி வழிமுறை அன்றி சண்டயிடுதல் முறயிலேயே அவனேடு உறவு இருக்கிறது.. சில வேளைகளில் வன்முறையாக வெடித்து முழு சமூகத்தின் மான்மும் போகிறது..ஷிர்க் மற்றும் பிதத் விடயத்தில் இலங்கை முஸ்லிம்கள் & முஸ்லிமல்லாதவர்களோடு எப்படி நடப்பது என்பது மிக முக்கியமான விடயம். இது சமாதான்மும் அமைதியுமான இஸ்லாத்தின் சர்வதேச் தூதை எடுத்துரைப்பதில் பெரும் பாதிப்பு செலுத்துகிற விடயமாகும். நாங்கள் இன்னும் நமது நாடு, சிறுபான்மைச்சூழல் குறித்து கவனமெடுக்காமல் த்ஃவா பற்றித் திட்டமிடுவது இனு வரும் புதிய தலைமுறயின்ரை கடுமையகப்பாதிக்கும்.ஒரு முஃமின் விபச்சார்ம் செய்யும் போதும் திருட்டுக்குற்றம் செய்யும் போதும் அவ்னை முஃமினாக கணக்கிலெடுக்கமுடியாது என்பது இஸ்லமிய அடிப்படை. இவை இரெண்டும் மிகப்பெரிய வன்முறயும் காடைத்தனமுமாகும்.இந்த நிலையில் சகோதர முஸ்லிமை கருத்தால் விமரிசிப்பதயும் தாண்டி வைவதும் அத்துமீறி தாக்குவதும் பெரிய வன்முறைதான். அவன் உயிரை அழிக்கும் அள்விலான் மீறல் வன்முறயின் உச்சக்கட்டம். யாராக இருந்தாலும் அது மிகப்பெரிய பாவமும் மனித் இனத்துக்கெதிரான் துரோகமும் ஆகிறது.இலங்கையின் இஸ்லமிய பிரச்சார் அமைப்புகள் தயவு செய்து இளைஞர்களை படிக்க விடுவேர்களா?? பல கடவுள் நம்பிக்கையும், மதமுறைமைகளும் உள்ள இலங்கையில் இஸ்லமிய பிரச்சார்ம் குரித்தும் நாட்டின் அபிவிருத்தியில் அவர்களை பெரிய அளவில் பங்எடுக்கவும் பங்கெடுக்கவும் அவர்கள் நிறய படிக்கவேண்டி இருக்கிறது. அவர்களை சுயமாக சிந்திக்க விடுங்கள்.. ஏற்கெனவே பது செய்த உங்கள் புனித விளக்கங்களையும்,உபதேசங்களையும் திணிக்க வேணடாம். அவர்களுக்க்ம் மூளை இருக்கிறது.. இது எல்ல வகையான செய்குமார்கள், பிர்சன்னிகள், அமப்புகள் எல்லோரிடமும் சொல்ல விரும்புகிற செய்தி.... அல்லாஹ் எங்களை மன்னிப்பானாக... ஆமீன்

    ReplyDelete
  2. சமமா என்ன சொல்ல வருகிறார் ?

    ReplyDelete
  3. ஒன்றுமில்லை சம்மா...சும்மா ஏதோசொல்கிறார் போலிருக்கிறது..!

    ReplyDelete