Thursday, July 9, 2009

சொல்ல மறந்த கதை




கிண்ணியாவிலிருந்து திருகோணமலை நகருக்கு கடல் வழியாக "பாதை'யில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

பச்சை சேட்,சாரன், வெள்ளைத் தொப்பி அணிந்து கையில் ஒரு பையுடனும் குடையுடனும் "பாதை'யின் இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த அந்த வயோதிபர் நம் கண்களில் படுகிறார். கிட்டநெருங்கி பேச்சுக் கொடுத்தோம்.

"அஸ்ஸலாமு அலைக்கும் நாநா...'' சிரித்தவாறே பதில் சொன்ன அவரிடம், ""நாங்க அம்பாறையிலிருந்தும் மாத்தறையிலிருந்தும் ஒங்கட ஏரியாவ சுத்திப் பார்க்க வந்திருக்கிறோம்'' எனச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே "என்னப் பத்தி மாத்தறை தினகரன் நிருபர் ஒரு செய்தி எழுதியிருக்கிறார் '' என முகம் மலர்ந்தவாறே பெரியவர் எம்முடன் கதைப்பதற்கு உஷாரானார்

"அப்படியா... என்ன செய்தி அது...?'' எனக் கேட்டதற்கு மூச்சு விடாமல் அந்த செய்தியை வாசித்து முடித்தார் அவர்.

"கிண்ணியா பூவரசந்தீவைச் சேர்ந்த வயோதிபரான ஜனாப் ஏ.எம்.இப்றாஹீம் என்பவர் தனது முச்சக்கர சைக்கிளில் தென்னிலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நாட்டில் பயங்கரவாதம் நிலவும் இக்காலப் பகுதியில் முச்சக்கர சைக்கிளில் பயணம் செய்ய வேண்டாம் என தனது உறவினர்களும், நண்பர்களும் கூறிய போதிலும் இவர் திடமான மனவுறுதியுடன் இந்த விஜயத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்தார். 1996.03.03. ஆம் திகதி திருகோணமலையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இவர் 1996.04.04 ஆம் திகதி கொழும்புக்கு வந்ததாகவும் கூறினார்.''

மாத்தறை தினகரன் நிருபரால் எழுதப்பட்ட தன்னைப்பற்றிய மேற்படி செய்தியை 12 வருடங்களின் பின்னரும் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் இந்தப் பெரியவரைப் பார்க்கையில் எமக்கு ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்தும் அவர் எம்மிடம் பேசினார்.

""நிறையப் பேர் சொன்னாங்க. நீங்க இந்த சைக்கிள்ல கொழும்புக்கு போக மாட்டீங்க என்டு. நான் போவேன் என்டு சவால்விட்டன். பேப்பர்ல என்ட பேரு வரும் என்டும் சொன்னன்.''

"கொழும்புக்கு சைக்கிள்ல போய் அமைச்சர் அஷ்ரபை சந்திக்க ட்ரை பண்ணினன். ஆனா அவர சந்திக்க முடியல.கொழும்புல உள்ளவங்க உதவி செய்வாங்க என்டு எதிர்பார்த்துதான் என்ட பயணத்த தொடங்கினன். ஆனா பெரிசா எந்த உதவியும் எனக்குக் கிடைக்கல... திரும்பி ஊருக்கே வந்துட்டன். ஊர் வந்து சேர ஒரு மாசம் எடுத்திச்சு. உதவிதான் கிடைக்காட்டியும், விட்ட சவால்ல வெற்றி கண்டுட்டோம் என்ட மகிழ்ச்சி இப்பவும் இருக்கு. பேப்பர்ல பேரு வந்தத நினைச்சா இப்பவும் சந்தோஷம்தான்...''

கால்கள் சுகவீனமான நிலையில் முச்சக்கர சைக்கிளில் கொழும்புக்குச் சென்று சாதனை படைத்த இப்றாஹீம் நாநாவிடம் உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் எனக் கேட்டோம்.

"நான் பிறந்தது யாழ்ப்பாணத்துல. என்ட தகப்பன்ட பெயர் பொன்னுத்துரை செட்டியார். என்ட தாயும் தகப்பனும் சின்ன வயசுலயே இறந்துட்டாங்க...நான் சின்ன வயசுலயே இஸ்லாத்துக்கு வந்தவன். அன்டையிலருந்து இன்டைக்கு வரைக்கும் அதே கொள்கையிலதான் நடக்கிறன்... திருகோணமலைக்கு வந்துதான் கலியாணம் முடிச்சது. எனக்கு 4 பிள்ளைகள். ஒரு பொம்புளப் புள்ளயும் இருக்கு....'' என்ற அவரிடம்...

"சரி ஒங்கட தொழில் என்ன?'' எனக் கேட்டதற்கு... "நான் கிண்ணியா துறையடி தைக்கியா, றகுமானியா பள்ளி, நடுப் பள்ளி, காக்காமுனை பள்ளி என்டு நிறைய பள்ளிவாசலுகள்ல மோதினாரா கடமை செஞ்சிருக்கன். இப்ப ஒன்டுக்கும் ஏலா... இருக்கிறதுக்கும் இடமில்ல... அங்கயும் இங்கயுமா அலஞ்சு திரிகிறன்'' என்றார் பெரும் சலிப்போடு. இப்பொழுது 78 வயதாகும் இப்றாஹீமுக்கு ஒரு காலால் நடக்க முடியாது. இப்றாஹீம் நாநா தன்னை ஒரு சாதனை வீரனாகவே கருதிக் கொள்வது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் பெருமிதம்தான்.

1 comment:

  1. நிச்சயம் நமக்கும் பெருமிதம்தான். இது போன்ற சாதனைகளை நமது ஊடகங்கள் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. உங்கள் பதிவு மகிழ்வைத் தருகிறது. பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete