Saturday, July 4, 2009

நனவாகுமா எங்கள் பூர்வீகம் மீளும் கனவு ?


அண்மைய போர்ச் சூழல் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் 3 இலட்சம் தமிழ் அகதிகள் குறித்து உலகமே பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில் சுமார் 19 வருடங்களாக அகதி முகாம்களிலேயே காலத்தைக் கடத்திவரும் வடமாகாண முஸ்லிம்கள் குறித்து யாருமே கவலையற்றிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்தும் வடமாகாணத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் 1990 இல் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட சுமார் 1 இலட்சம் முஸ்லிம்கள் இன்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.

விடுதலைப் புலிகள் தங்களை வெளியேற்றிய விதத்தை இப்படி நினைவு கூருகின்றார் ஒரு பெரியவர்:
"1990 ஒக்டோபர் 27 இல் நாங்கள் வெளியேற்றப்பட்டோம். கடந்த 18 வருடங்களாக கடும் துன்பங்களுடன்தான் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மீண்டும் எங்களது சொந்தக் கிராமத்தில் மீளக்குடியேறி தமிழ் மக்களுடன் பிட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழவேண்டும் என்று கனவு கண்ட வண்ணமிருக்கிறோம். இன்று அதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. தமிழ் மக்கள் எங்களின் எதிரியல்ல. தமிழ் மக்களுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். இனி இந்த நாட்டில் யுத்தப் பிரச்சினையே இருக்கக் கூடாது. எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழக் கூடிய சாத்தியக் கூறுகளைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'' எனக் கூறும் அவர் இந்த 18 வருட காலத்தில் அரசாங்கத்தின் சார்பாக தமக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

தற்போது விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டது இவர்களில் பலருக்கு மகிழ்ச்சியைத் தோற்றுவித்துள்ள போதிலும் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பச் செல்ல முடியுமா என்பதில் இந்த மக்கள் இன்னமும் நம்பிக்கையற்றே இருக்கின்றனர்.

"எல்.ரி.ரி.ஈ தோற்கடிக்கப்பட்டது ஒரு வகையில எங்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அதிலும் எங்களின் தாயகப் பகுதியில் எங்களை மீள்குடியேற்றுவதற்கான சூழல் எங்களுக்கு மகிழ்ச்சியத் தருகிறது. எங்கள் சமூகத்திற்கான சகல பாதுகாப்பு உத்தரவாதமும் அளிக்கப்படுமானால் நாங்கள் மீளக் குடியமர்வதில் எந்த ஆட்சேபனையுமில்லை'' என்றும் அந்தப் பெரியவர் குறிப்பிடுகிறார்.

இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மீளக் குடியமர்வது குறித்த அம்மக்களின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறார் சுஜான் எனும் இளைஞர்.

"சிலர் மீளக் குடியேறுவதந்கான சாத்தியம் இருக்கிறதுதான். ஆனாலும் சிலர் போகமாட்டார்கள்.ஏனெனில் அங்கு எல்லோருக்கும் குடியிருப்பதற்கான இட வசதிகள் இல்லை. அவ்வாறானவர்கள் போக மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். சிலருக்கு அங்கு இடங்கள் இருந்தும் வீடு வாசல்கள் இல்லை. அதனால் திடீரெனப் போவது சாத்தியமில்லை. அங்கு தொழில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமானால் சிலர் அங்கு திரும்பிச் செல்ல முடியும்.இங்குள்ள சொத்துக்களை விட்டுவிட்டு எவரும் இலகுவில் போகமாட்டார்கள். ஏனெனில் எல்லோரும் சொப்பிங் பேக்குடன்தான் வந்தவர்கள். அப்பிடியிருந்துதான் இன்று வரைக்கும் குருவி சேர்ப்பதுபோல் சேர்த்து வீடு வாசல் கட்டியிருக்கிறார்கள். அதனால இதை விட்டுவிட்டுப்போகும் நிலை வராது. இருப்பினும் நஷ்டஈடுகள் ஏதாவது வழங்கப்படுமானால் இங்குள்ளவர்களில் 50 வீதமானோர் மீளக்குடியமர்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன'' என்கிறார் அந்த இளைஞர்.

இங்கு நாம் சந்தித்த ஒரு பெண் தான் திரும்பிச் செல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டார். நான் திரும்பிப் போகத்தான் விரும்புறன். இங்கு நிலவும் சூழல் சரியில்øல. எங்களுடைய சொந்த ஊருக்குச் செல்வதற்குத்தான் போகத்தான் நாங்க ஆசைப்படுகிறோம் என்றார் அப் பெண்.
தான் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்ததாகக் குறிப்பிடும் அவர் இறுதியாக 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டைப் பார்த்து விட்டு வந்ததாகவும் தெரிவிக்கின்றார்.

இந்த மக்கள் இடம்பெயர்ந்து சுமார் இரண்டு தசாப்தங்கள் ஆகின்ற நிலையில் இந்த அகதி முகாம்களில் ஒரு புதிய தலைமுறையே பிறந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். சிறு குழந்தையாக இங்கு வந்த ஸவானா தற்போது இரு குந்தைகளுக்குத் தாயாக இருக்கிறார். இவருடைய தாய் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிச் செல்வதற்கு முடிவெடுத்திருந்தாலும் இவர் புத்தளத்திலேயே தொடர்ந்தும் தங்குவது எனத் தீர்மானித்திருக்கிறார்.
"எனக்கு யாழ்ப்பாணம் என்றால் என்னவென்றே தெரியாது. சின்ன வயதில் இடம்பெயர்ந்தேன். அதனால் அங்கு போவதற்கு விருப்பமில்லை. எங்கள் உம்மா போவார். நான் இங்குதான் இருக்க விரும்புகிறேன்.'' என்கிறார் ஸவானா.

புத்தளத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கிருக்கும் சில வீடுகள் கல் வீடுகளாகக் காணப்பட்டாலும் பல குடிசை வீடுகளும் இங்கு இருக்கத்தான் செய்கின்றன.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு கிளிநொச்சிக்கு சென்று ஹோட்டல் ஒன்றைத் தொடங்கிய ஸெய்யித் அஹமட் அக்பர் தற்போது தான் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை இப்படி விபரிக்கிறார்.
"நாங்கள் இடம்பெயர்வதற்கு முன்னர் தாஜ் மஹால் ஹோட்டல் எனும் பிரபலமான ஹோட்டல் ஒன்றை நடத்தினோம். பின்னர் சமாதான காலத்தில் அங்கு திரும்பிச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டோம். அதனால் பிரச்சினையில் மாட்டிக் கொண்டோம். கடைசியாக இந்த வருடம் முதலாம் திகதிதான் இங்கு திரும்பி வந்தோம்.வரும்போது உடுத்த உடையோடுதான் வந்தோம். நாங்கள் வரும்போது பிரச்சினை பெரிதாக உக்கிரமடையவில்லை. நான் இங்கு திரும்பி வந்தபின்னர் என்னுடைய 2 பிள்ளைகளை புலிகளோடு தொடர்பு வைத்திருந்தார்கள் எனக் கூறி பொலிசார் கைது செய்தனர். கடந்த 6 மாதங்களாக எந்த விசாரணையுமில்லை. எங்களுக்கு இங்கு எந்த தொழில்வாய்ப்புமில்லை. நாங்கள் அங்குதான் திரும்பிச் செல்ல வேண்டும் .அவ்வாறு நாங்கள் போவதென்றால் எங்களுக்கு நிரந்தரமானதொரு தீர்வை வழங்க வேண்டும்.''என்றார்.

முஸ்லிம்களான உங்கள் பிள்ளைகளை ஏன் புலிகள் என்று கூறி கைது செய்தார்கள்?எனக் கேட்டதற்கு "அங்குள்ள பாடசாலைகளில்தான் எங்கள் பிள்ளைகள் படித்தார்கள். என்னுடைய ஒரு மகளுக்கு சிங்களம் தெரியும். பிரச்சினையே அதுதான். அவருக்கு சிங்களம் தெரியும் என்பது தெரிந்தவுடன் அவரை ஒரு சிங்கள அறிவிப்பாளராகப் பணிபுரிவதற்காக புலிகள் அழைத்துச் சென்றார்கள். நாம் எவ்வளவு கூறியும் அவர்கள் விடவில்லை. அவரை வைத்து அவர்கள் சிங்களமும் படித்தார்கள். பின்னர் என்னுடைய மகள் சுகவீனமுற்றதன் காரணமாக அவரை விட்டு விட்டார்கள். அங்கு ஒரு அரசாங்கம் இருந்ததது.அவர்கள் சொல்வது போல்தான் நாங்கள் செய்ய வேண்டும். நாங்கள் உழைத்தால் அவங்களுக்கு வரி கட்ட வேண்டும். வரி கொடுக்காமல் நாங்கள் இருக்க முடியாது. இங்கு வந்த பின்னர் எனது மகளும் மகனும் புலிகளுக்கு உதவியதாகக் கூறி பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்கள் இப்போது பூசா முகாமில இருக்கிறார்கள். யாரிடம் போய் உதவி கேட்பது? யாருமே உதவி செய்ய முன்வருவதாகத் தெரியவில்லை.இதற்கிடையில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் பலர் கருதவில்லை என்றும் இதனால்தான் பலர் அங்கு சென்று மீளக் குடியேற அஞ்சுவதாகவும் குறிப்பிடுகிறார் வடமாகாண முஸ்லிம் முன்னணியின் தலைவர் முஹம்மது கபீர்.

"புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகின்றபோதிலும் அதில் சந்தேகம் கொள்கின்ற ஒரு சில மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் அரசாங்கம் சரியான பாதுகாப்பைத் தருமாக இருந்தால் அடுத்த நிமிடமே வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியமர்வதற்கு தயாராக இருக்கிறார்கள்'' என்கிறார் கபீர்.

இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும்பட்சத்தில் அவர்களின் நிலம் வீடு போன்றவற்றின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களைப் பெற அரசாங்கம் உதவும் என்கிறார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன். இவ்வாறு இடம்பெயர்ந்த 25,000 குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்கிறார் அவர். இதற்கிடையில், சமீபத்தில் வன்னியிலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் சுமார் 3 லட்சம் பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீள்குடியேற்ற நீண்ட நாட்களாகும் என்று கூறுகிறார்கள். இதற்கு முன்னர் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா? என அமைச்சரிடம் கேட்டதற்கு "அப்படியல்ல. முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதில் அரசாங்கம் ஆர்வமாக இருக்கிறது.இரண்டு மீள்குடியேற்றமும் முன்,பின் என்ற வேறுபாடுகளில்லை. மிதிவெடிகள் அகற்றப்பட்டவுடன் முதற்கட்டமாக நாங்கள் மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்கலாம். எல்லோரும் ஒரே பிரதேசத்திலேயே வாழ்ந்தவர்கள். எனவே அந்த மீள்குடியேற்றம்,இந்த மீள்குடியேற்றம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் நீண்ட கால அகதிகள். இவர்கள் அண்மைக்கால அகதிகள். தமிழ் சகோதரர்களுடைய வீடுகள் அப்படி அப்படியே இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுடைய வீடுகள் அவ்வாறு அல்ல. 18 வருடங்களிலே பழுதடைந்த பல வீடுகள் இருந்த இடம் தெரியாமலே அழிந்துபோயுள்ளன. எனவே அவர்களது மீள்குடியேற்றத்தை திட்டமிட்ட முறையிலே செய்யவேண்டிய ஒரு தேவைப்பாடு இருக்கிறது.

நாம் சந்தித்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது வீடு மற்றும் காணிகள் தொடர்பான ஆவணங்களை தவறவிட்டுவிட்டதாகக் கூறுகின்றனர். அவற்றை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இது பற்றி என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டதற்கு "18 வருட கால அகதிகளுடைய மீள்குடியேற்றத்தை திட்டமிட்டு மேற்கொள்ள எண்ணியிருக்கிறோம். அதற்கான ஒரு ஆலோசனை சபையை நியமித்து இது சம்பந்தமாக ஆராய்ந்து அதனை நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தவிருப்பதால் இழந்த ஆவணங்கள்,நஷ்டஈடு, வீடுகள் கட்டுவது போன்ற எல்லா விடயங்களையும் நாங்கள் திட்டமிட்டுச் செய்ய எண்ணியிருக்கின்றோம். என்றார். அத்துடன், இடம்பெயர்ந்த பல பிரதேசங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வீடு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டமொன்றை உலக வங்கியின் உதவியுடன் இலங்கை அரசு தற்போது முன்னெடுத்து வருவதகாவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் குறிப்பிட்டார்.இதேவேளை விடுதலைப் புலிகளைப் பற்றிய அச்சம் தேவையில்லை என்கின்றார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான இமாம்.

"தாங்கள் செய்த தவறை தாங்களே ஒப்புக் கொண்ட நிலையில்தான் முஸ்லிம்கள் தொடர்பான புலிகளின் அணுகுமுறை இருந்தது. அதனைப் பொறுத்தவரையில் நான் நூற்றுக்கு நூறு வீதம் ஊர்ஜிதமாகச் சொல்வேன். எந்த விதமான அச்சமோ ஐயமோ கொள்ள வேண்டிய தேவை இல்லை. நிச்சயமாக என்னால் அதனை துணிந்து கூற முடியும்'' என்றார் முஹம்மது இமாம்.

(வடமாகாண முஸ்லிம் அகதிகள் தொடர்பாக 24.06.2009 அன்று ஒலிபரப்பான பி.பி.சி தமிழோசை பெட்டக நிகழ்ச்சியைத் தழுவியது)

1 comment:

  1. HI Brother .Thanks for your Concerning about the Muslim ummath but Do not Forget "Patchoodthihal"
    time to time change the colour

    i wish you to continue great job

    Ex-Jihadi

    ReplyDelete