க.பொ.த. சா.தர பரீட்சை நேற்று நிறைவு பெற்ற போது அந்நாஸர் வித்தியாலயத்தில் பரீட்சை எழுதிய மாணவர்கள் தமது மகிழ்ச்சியை இப்படி 'மை' அடித்து வெளிப்படுத்தினார்கள்.......
Wednesday, December 23, 2009
மை அடித்தல்
க.பொ.த. சா.தர பரீட்சை நேற்று நிறைவு பெற்ற போது அந்நாஸர் வித்தியாலயத்தில் பரீட்சை எழுதிய மாணவர்கள் தமது மகிழ்ச்சியை இப்படி 'மை' அடித்து வெளிப்படுத்தினார்கள்.......
Wednesday, December 16, 2009
Peoples Liberation Army ; உண்மையா? பூச்சாண்டியா?
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாக புரளிகளைக் கிளப்பிவந்த தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு தற்போது ஒரு புதுக்கதை கிடைத்திருக்கிறது.
மக்கள் விடுதலை இராணுவம் (Peoples Liberation Army- PLA) எனும் பெயரில் புதிய தமிழ் ஆயுதக் குழு ஒன்று கிழக்கு மாகாணத்தில் தோற்றம் பெற்றி ருக்கிறது என்பதே அந்த புதுக்கதை. வடக்குக் கிழக்கில் தமிழீழத்தை நிறுவு வதை அடிப்படையாகக் கொண்ட ஆயுதப் போராட்டம் ஒன்றை இக் குழு முன்னெ டுக்கத் திட்டமிட்டிருப்பதாக "த லண்டன் டைம்ஸ்' பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
புலிகளுக்குப் பின்னர் இந்த நாட்டில் இன்னுமோர் ஆயுதப் போராட்டக் குழு தலைதூக்கிவிடக் கூடாது என்பதே அனை வரினதும் பிரார்த்தனையாக இருக்கையில் இவ்வாறானதொரு தகவல் வெளியாகியி ருப்பது நாட்டை நேசிக்கும் அனைவருக் குமே பெரும் அதிர்ச்சியை அளித்தி ருக்கிறது.
2009 மே மாதத்தில் விடுதலைப் புலி களுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டதாக அரசாங் கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தபோதி லும், இதுவரை தமிழ் மக்களுக்கான உரிய அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என் பதைக் காரணமாகக் கொண்டு வடக்குக் கிழக்கில் "ஜனநாயக சோசலிச தமிழீ ழத்தை' நிறுவுவதற்காகவே தாம் மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டத்தை துவங்கவிருப் பதாக பி.எல்.ஏ.வின் கிழக்கு மாகாண இராணுவப் பிரிவின் கொமாண்டர் என தன்னை அடையாளப்படுத்தும் கோணேஸ் என்பவர் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி யாளர் அந்தனி லொயிட்டுக்கு பேட்டி யளித்திருக்கிறார்.
பலஸ்தீன விடுதலை இயக்கத்துடனும் (பி.எல்.ஓ) இந்திய மாவோயிஸ்ட் குழுக் களுடனும் மட்டுமன்றி கியூளா நாட்டுட னும் நெருங்கிய தொடர்பைக் கொண் டுள்ள தமது இராணுவத்தில் 300 உறுப்பி னர்கள் இருப்பதாகவும் அண்மையில் வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் பொது மக்கள் மத்தியிலிருந்து 5000 பேரைத் தெரிவு செய்து தமது இராணுவத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் கோணேஸ் மேலும் தெரிவித்திருக்கிறார்.
""சுமார் 10 பேரைக் கொண்ட ஒரு குழு வினால் எமது இராணுவம் நிர்வகிக்கப்படு கிறது. எமது இராணுவத்தில் முன்னாள் புலி உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால் புலிகள் மிகவும் தீவிரவாத அமைப்பாகவே இயங்கி வந்தனர். அவர்கள் மக்களின் தேவைகளை முன்னிறுத்தாது தமது தேவைகளை மாத்திரம் முன்னிறுத்தியே போராடினர். நாங்கள் அப்படியல்ல. சோச லிச கொள்கையைக் கொண்டவர்கள். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு குழுக்களையும் எம்மோடு ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
நாங்கள் விடுதலைப் புலிகளை விடவும் அரசியல் ரீதியாக திறன்மிக்கவர்கள். பயங்கரவாதிகள் எனும் லேபல் எங்கள் மீதும் ஒட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம். எங்களது எதிரி இலங்கை அரசாங்கம் தான். இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்க சர்வதேச சமூகத்தின் உதவியை பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
நாம் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிர்வாக மற்றும் பொருளாதார இலக்குகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் எதிர்காலத் தில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டி ருக்கிறோம். அதிலும் குறிப்பாக விடுத லைப் புலிகள் இயக்கத்திலிருந்த பிரிந்து அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கும் கருணா அணியினருக்கு எதிராகவே எமது முதல் தாக்குதல் இடம்பெறும். அதற்கான தருணம் நெருங்கிவிட்டது'' என்றும் கோணேஸ் தனது செவ்வியில் தெரிவித்தி ருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளி யாகி மஹிந்தவா? பொன்சேகாவா? என அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலை யில் திடீரென புதியதோர் ஆயுதக் குழு பற்றிய அறிவிப்பு வெளியானமை பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதுவும் கிழக்கு மாகாணத்தில் மிகவும் இரகசியமாக இயங்கிவருவதாகக் கூறப்ப டும் இந்த ஆயுதக் குழு பற்றிய தகவலை லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இலங்கைக்கு வந்து செய்தியாக்கி யிருப்பது, இதன் பின்னணியில் வெளி நாட்டு சக்திகள் உள்ளனவா எனும் கேள்வி யையும் நம்முள் எழுப்புகிறது.
இத்தகவல் வெளியானவுடனேயே அரசாங்கம் சார்பாக கருத்து வெளியிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல ""இவர்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இராணுவ ரீதியாகவன்றி அரசியல் ரீதியா கவும் நிர்வாக ரீதியாகவும் அரசாங்கம் இவர்களைக் கையாண்டு வருகின்றது'' என ஒற்றை வரியில் பதிலளித்திருக்கிறார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்போவதாகவும் வடக்குக் கிழக்கில் தமிழீழத்தை நிறுவ போராடப் போவதாக வும் கூறியுள்ள ஓர் ஆயுதக் குழு பற்றி அரசாங்கம் இவ்வாறு அசட்டையாக பதிலளித்திருப்பதும் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. அரசாங்கமே இவ்வா றானதொரு புதிய ஆயுதக் குழுவை கட் டமைத்து தமது அரசியல் நலன்களுக்கு அவர்களை பயன்படுத்த முனைகின்றது எனும் குற்றச்சாட்டுக்களும் தற்போது மேலெழுந்துள்ளன.
இத் தகவல் வெளியான மறுதினம் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்திய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., அரசாங்கமே இவ்வாறான ஆயுதக் குழு ஒன்றை உரு வாக்கி தனது அரசியல் எதிரிகளை அழித் தொழிக்க முற்படுவதாக தாம் சந்தேகிப்ப தாக குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை தீர்த்துக் கட்டுவதற்கே அரசாங்கம் இந்தக் கதை யாடலைக் கட்டவிழ்த்துள்ளதாகவும் இல்லாவிடின் இந்தக் குழுவைக் கண்டு பிடித்து அவர்களை அழித்தொழிக்கும் பணியை அரசாங்கம் முன்னெடுக்க வேண் டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தி ருந்தார்.
மனோ கணேசன் மட்டுமன்றி புலி ஆதரவு சக்திகளும் இதே கருத்தையே வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னர் நடை பெற்ற பல்வேறு அரசியல் படுகொலைக ளுக்கு புலிகள் மேல் பழியைப் போட்டு தப்பிக் கொண்ட அரசாங்கம், புலிகள் இல்லாத சூழ்நிலையில் எதிர்காலத்தில் தமது அரசியல் எதிரிகளை அழிப்பதற்கே இவ்வாறானதொரு திட்டத்தை அரங் கேற்ற முற்படுகின்றது என்றும் புலி ஆதரவு இணையத்தளங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
இதேபோன்றுதான் இக் குழுவின் பின்னணியில் சில வெளிநாட்டு சக்திகள் இருக்க முடியும் எனும் சந்தேகங்களும் எழுகின்றன. இலங்கையில் நடைபெற்ற போரைப் பயன்படுத்தி இலாபம் அடைந்த சில நாடுகள் மீண்டும் இலங்கையில் ஆயுதக் கிளர்ச்சி ஒன்றைக் கட்டமைத்து அதில் குளிர்காய முற்படலாம் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஈராக், ஆப்கா னிஸ்தான், பாகிஸ்தான் வரிசையில் இலங் கையிலும் மீண்டும் குண்டு வெடிப்புக்க ளையும் கொலைக் கலாசாரத்தையும் தூண்டிவிட்டு தமது மூக்கை நுழைக்கவும் சில சக்திகள் முயற்சிக்கக் கூடும். இல்லை யேல், வடக்குக் கிழக்கில் பொருளாதார ரீதியாக முதலீடுகளை மேற்கொண்டுள்ள சில நாடுகள் இவ்வாறானதொரு ஆயுதக் குழு இருக்கின்றது எனும் புரளியைக் கிளப்பி விடுவதன் மூலம் ஏனைய நாடுகள் கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வ தையோ அல்லது கால்பதிப்பதையோ தடுப்பதற்கான வியூகமாகவும் இது இருக்கக் கூடும்.
எது எவ்வாறிருப்பினும், இவ்வாறான தோர் ஆயுதக் குழு பற்றிய தகவல் வெளி யாகி இரு வாரங்களாகின்ற நிலையில் அரசாங்கம் இது தொடர்பில் ஆக்கபூர்வ மான நடவடிக்கைகள் எதனையும் எடுத்த தாகத் தெரியவில்லை. கெஹலிய ரம்புக் வெலவின் கூற்றோடு மாத்திரம் அரசாங் கம் இதுபற்றிக் கருத்துக் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டது.
சுமார் 30 வருட காலமாக அசைக்கவே முடியாதிருந்த ஒரு பயங்கரவாத இயக் கத்தை அழித்தொழித்த இந்த அரசாங்கத் தினால் தற்போதைக்கு வெறும் 300 பேரை மாத்திரமே அங்கத்தவர்களாகக் கொண் டுள்ள பி.எல்.ஏ. இயக்கத்தை துடைத்தெ றிவது ஒன்றும் பெரிய காரியமல்ல. லண்டனிலிருந்து ஒரு பத்திரிகையாளர் இலங்கைக்கு வந்து கிழக்கு மாகாணத்தின் இரகசிய இடம் ஒன்றுக்குச் சென்று அதன் கொமாண்டரைச் சந்தித்து இதுபற்றி செய்தி வெளியிட முடியுமானால் பெரும் புலனாய்வுப் படையையே கொண்டுள்ள இலங்கை அரசினால் அதனைக் கண்ட றிவது முடியாத காரியமா என்ன?
எனவே, இலங்கை அரசு இது தொடர் பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியயாரு குழு உண்மையாகவே கிழக்கில் இயங்குகிறதா இல்லையா எனும் சந்தேகத்தை அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் புலிகளை ஒழித்த வெற்றியை உரிமை கோருவதற்கான குறைந்தபட்ச தகுதி கூட இலங்கை அரசுக்கும் இராணுவத்திற்கும் இல்லாது போய்விடும்.
Saturday, December 12, 2009
சூரிச்சிலும் சூடாகின கதிரைகள்...!

துரதிஷ்டவசமாக இலங்கையின் இன முரண்பாடு தொடர்பில் அவ்வப் போது அத்தி பூத்தாற்போல் நடை பெறும் பேச்சுவார்த்தைகளெல்லாம் கண்காணாத தொலைவிலுள்ள தேசங் களிலேயே நடந்து முடிந்து விடுகின்றன. பெரும் எதிர்பார்ப்புகளோடும் ஆரவா ரங்களோடும் தொடங்கும் மாநாடுகள், ஈற்றில், "பொது உடன்பாட்டுக்கு வர முடியவில்லை' எனும் மூன்று வார்த் தைக் கூற்றுடன் முடிவுக்கு வருவது வழமை.
அப்படித்தான் கடந்த நவம்பர் 19 முதல் 22 வரை சுவிட்சர்லாந்தின் தலை நகர் சூரிச்சில் நடைபெற்ற தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் மாநாடும் பெயர ளவு இணக்கப்பாட்டுடனும் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் எதிர்கா லம் பற்றிய பொது உடன்பாட்டை எட்டாத நிலையிலும் முடிவடைந்தி ருக்கிறது.
தமிழர் தகவல் நடுவம் எனும் அமைப் பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் இலங்கையின் தமிழ்-முஸ்லிம் கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற 26 முக்கிய அரசியல்வாதி களும் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
யார் இதனை ஏற்பாடு செய்திருக் கிறார்கள்? முக்கியமாக என்ன விடயங் கள் இங்கு பேசப்படப் போகின்றன? எனும் கேள்விகளுக்கு விடைதெரியாத நிலையிலேயே இம்மாநாடு ஆரம்பமா னது. தமிழர் தகவல் நடுவகத்தின் தலை வர் வி.வரதமகுமாரின் தலைமையில் இம்மாநாடு கூட்டப்பட்டிருந்தாலும் இங்கு கலந்துரையாடப்படும் என ஏலவே ஏற்பாட்டாளர்கள் தயாரித்திருந்த நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இலங்கையில் நடைபெறப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ்-முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிப்பது? எனும் தலைப்பே இதில் முக்கிய இடம்வகித்ததா கவும் மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவராத நிலையில் அது குறித்து விவா திப்பது அவசியமற்றது என பங்குபற்றுனர் கள் வலியுறுத்தியதன் காரணமாக அத் தலைப்பு கைவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஏற்பாட்டாளர்களால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரல் கைவிடப்பட்டு, பங்குபற்றுனர்களா லேயே புதிய நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக் கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், அரசியல் தீர்வுத்திட்டம், அரசியல் கார ணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களை விடுவித்து புனர்வாழ்வளிப்பது ஆகிய மூன்று விட யங்கள் தொடர்பில் இங்கு முதற்கட்ட மாக ஆராயப்பட்டதாக அமைச்சர் டக் ளஸ் தேவானந்தா பி.பி.சி. தமிழோசைக் குத் தெரிவித்திருந்தார்.
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற் றுவது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெறத் தொடங்கியவேளை, டிசம்பர் மாதத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கி யிருக்கும் சகல மக்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்ததையடுத்து இவ் விடயம் மேற்கொண்டு பேசப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தமிழ் பேசும் மக்களின் அர சியல் உரிமைகளுக்கான இலக்கு என்ன? அதனை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான வழிவகைகள் என்ன? என்ற விடயத்திலும் இம் மாநாட்டில் பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அனைத் துக் கட்சிகளும் பொது உடன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் கட்சிகளின் தலைவர்கள் கையயாப்பம் இட்டு வெளியிடுவதாக இருந்த புரிந்துணர்வு உடன்பாடு ஈற்றில் அவர்கள் உடன்பாட்டுக்கு வரத்தவறிய தால் ஒரு வேலைத்திட்டத்திற்கான ஆவ ணமாக்கப்பட்டது. பின்னர் அந்த வேலைத் திட்டத்திற்கான ஆவணத்திலும் இலக்கு களை அடைவதற்கான நடைமுறைச்சாத்தி யமான வழிவகைகளில் உடன்பாடு எட் டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாநாட்டில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு என்ற இலக்கும் அதனை அடைவதற்கான நடைமுறைச் சாத்திய மான விடயங்கள் என்ற தலைப்பிலேயே பிரதான முரண்பாடு ஏற்பட்டதாக தெரி விக்கப்படுகிறது. இரண்டு தேசங்களைக் கொண்ட அரசு, இந்தியன் மொடல், சமஷ்டி என்ற விவாதங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீக ரிப்பது என்ற இலக்கை ஏற்றுக்கொள்வது பற்றிய மிகநீண்ட விவாதம் இடம்பெற்றுள் ளது. அதில் சிங்கள மக்களுக்குள்ள அதே உரிமை தமிழ் மக்களுக்கும் உண்டு என்றும் தென்பகுதி மக்களை அச்சப்பட வைக்கும் பதங்களைப் பயன்படுத்து உசித மானதல்ல என்றும் இலங்கை அரசுடன் இணக்கப்பா டான அரசியலை மேற்கொள்வதன் மூலமே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக் கான தீர்வை எட்ட முடியும் எனவும் இங்கு ஒருசாரார் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சொல்லாடல் தொடர்பில் இன்னு மொரு சாரார் சுயநிர்ணய உரிமை என்ற பதத்தை உபயோகிக்க வேண்டும் எனவும் ஏனைய கட்சிகள் அச்சொல்லாடலை தவிர்க்க வேண்டு என்ற நிலையிலும் நீண்ட முடிவற்ற விவாதத்தை நடத்தியுள்ளன.
இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்கள், உயர் பாதுகாப்பு வல யம், மக்களின் சுதந்திர நடமாட்டம் போன்ற விடயங்களில் பெரும்பாலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் இலக்கு, அதனை அடைவதற்கான நடை முறைச் சாத்தியமான வழிவகைகள் பற்றிய விடயமே மாநாட்டின் பெருமளவு நேரத்தை எடுத்திருந்தது. மாநாட்டின் இறுதி நாளின் இறுதி நிமிடங்கள் வரை இது தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை.
விவாதங்கள் சில சமயங்களில் கடுமை யாக இருந்தபோதும் ஆரோக்கியமாக அமைந்ததாக கலந்து கொண்டோர் தெரி விக்கின்றனர். அரசியல் தீர்வுக்கான இலக்கு, அதனை அடைவதற்கான நடைமுறைச் சாத் தியமான வழிவகைகள் பற்றிய கருத்தொற் றுமை ஏன் எற்படவில்லை? என ஊடகவி யலாளர்கள் கேட்டதற்கு, எல்லா விடயங் களிலும் ஓரிரு நாட்களிலேயே கருத்தொற் றுமை ஏற்பட்டு விடும் என எதிர்பார்க்க முடி யாது என பங்குபற்றுனர்கள் பதிலளித் துள்ளனர்.
தமிழ் பேசுகின்ற தமிழ்-முஸ்லிம் கட்சி கள் சந்தித்த இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கட்சிகளின் தலைவர்கள் இம்மாநாட்டை பயனுள்ள ஒன்றாகவே தாங்கள் பார்ப்ப தாகத் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட வர்கள் முதற் தடவையாக சந்தித்து ஒரு வருக்கொருவர் ஹலோ சொல்கின்ற சூழ் நிலை ஏற்பட்டுள்ளமை தமக்கு மகிழ்ச்சி யளிப்பதாக சில தமிழ் அரசியல் தலைவர் கள் இங்கு குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் ஒரு ஹலோ சொல்வதற்கு ஆயிரக்கணக் கான டொலர்களை அள்ளியிறைக்க வேண்டுமா? அதையே இலங்கையில் செய்தால் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை களுக்கு அதுவே மிகப் பெரும் தீர்வாக அமைந்து விடுமே என்கிறார் நமது ஊடக நண்பர் ஒருவர்.
Monday, August 3, 2009
புலிகளற்ற தேசத்தில் சுஹதாக்கள் தினம்!
வருடாந்தம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தேசிய சுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் இந்த வருடம் அனுஷ்டிக்கப்படுகின்ற சுஹதாக்கள் தினத்திற்கும் இதற்கு முன்னர் அனுஷ்டிக்கப்பட்ட சுஹதாக்கள் தினங்களுக்குமிடையே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கின்றது.
இலங்கை முஸ்லிம்கள் சுஹதாக்கள் தினம் என ஒரு நாளைப் பிரகடனப்படுத்தி அதனை வருடாந்தம் அனுஷ்டித்துவர வேண்டியதற்குக் காரண கர்த்தாக்களாயிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று நம்மத்தியில் இல்லை என்பதே அந்த வித்தியாசமாகும்.
1980 களின் பின்னர் வடக்கு கிழக்கில் புலிகள் கட்டவிழ்த்துவிட்ட ஆயுதக் கலாசாரம் இதுவரை சுமார் 7000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிரைக் குடித்திருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல அமைந்ததுதான் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையாகும். 1990 ஆகஸ்ட் 3 ஆம் திகதி காத்தான்கடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல், ஹுசைனியா தைக்கா என்பவற்றில் இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அல்லாஹ்வின் இல்லத்தினுள் வைத்து பாசிசப் புலிகளால் அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடூரம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சர்வதேச ரீதியில் கூட இலங்கை முஸ்லிம்கள் குறித்துப் பேசப்படுமிடங்களிலெல்லாம் காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலையும் ஞாபகப்படுத்தப்படுமளவு இச் சம்பவம் வரலாற்றில் இரத்தக் கறைகளால் பதியப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான் காத்தான்குடியை மையமாகக் கொண்டு இயங்கிவரும் முஸ்லிம் தேச சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் ஆகஸ்ட் 3 ஆம் திகதியை தேசிய சுஹதாக்கள் தினமாகப் பிரகடனப்படுத்தி ஞாபகார்த்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
கத்தமுல் குர்ஆன், அன்னதானம், சுஹதாக்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குதல், சுஹதாக்கள் நினைவுச் சொற்பொழிவு என வருடாந்தம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட சில வருடங்களில் மாத்திரம் மிகப் பிரமாண்டமான அளவில், தேசிய, சரவதேச ஊடக கவனயீர்ப்புகளுடன் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்போது நாட்டின் முக்கிய முஸ்லிம் அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் பங்கேற்றிருக்கின்றனர். சுஹதாக்களின் பெயரால் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சில சமயங்களில் சுஹதாக்கள் தினமேடை முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆடுகளமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஷûஹதாக்களை நினைவு கூர்ந்து மலர்களும் துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் "சல்லடைத் தேசம்' எனும் பெயரில் சுஹதாக்கள் நிறுவனம் வெளியிட்ட ஆவணத் தொகுப்பை முக்கியமானதாகக் கொள்ளலாம்.
இதற்கப்பால் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கப் பெறும் உதவிகள் அவ்வப்போது சுஹதாக்கள் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இக் குடும்பங்களுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய வகையில் இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க உதவியும் வழங்கப்படவில்லை எனும் பெருங்குறைபாடு இருப்பது உண்மை.
சுஹதாக்கள் குடும்பங்களுக்காக ஒரு வீடமைப்புத் திட்டமோ, அவர்களின் பிள்ளைகளுக்கான நிலையான புலமைப்பரிசில் திட்டமோ அல்லது சுய தொழில் உதவிகளோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
ஒரே நாளில் விதவைகளான தாய்மார்கள், தமது உறவினர்களின் உதவியுடனும் குடிசைக் கைத்தெõழில்கள் மூலமுமே குடும்பங்களை ஓட்டி வந்திருக்கின்றனர். இக் குடும்பங்களில் இன்று திருமண வயதை எட்டிய எத்தனையோ யுவதிகள் திருமணம் முடிப்பதற்கான வசதி வாய்ப்புகளின்றி அல்லல்படுகின்றனர்.
அந்த வகையில்தான், இனிவரும் காலங்களிலாவது இக் குடும்பங்களுக்கான நிலையான உதவிகள் சென்றடைவது குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.
இந்த நாட்டில் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்த காலப் பகுதியில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல் படுகொலையை முன்னிறுத்தி முஸ்லிம் தேச அரசியலில் முக்கிய காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதனை மையப் பொருளாகக் கொண்டு இலங்கையின் இன முரண்பாட்டில் சிக்குண்ட முஸ்லிம் சமூகத்தின் இழப்புக்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவை அக்காலப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க பிரதிபலன்களையும் வெளிப்படுத்தியிருந்தன.
ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்ட நிலையிலும் "சுஹதாக்கள் தினம்' எதனை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்படல் வேண்டும் என்பநது கலந்தரையாடப்பட வேண்டிய ஒரு விடயமாகும். வெறுமனே வருடாந்தம் அனுஷ்டித்தல் என்பதற்கப்பால் ஒரு தூய்மையான இலக்கை நோக்கிய நீண்ட கால வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படல் அவசியம்.
வடக்கு கிழக்கில் புலிகளின் அச்சுறுத்தல் நிலவிய காலப் பகுதியில் சுஹதாக்களின் பெயரால் ஏதேனும் முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு பலரும் அஞ்சியது உண்மைதான். ஷுஹதாக்கள்தின மேடைகளில் புலிகளை விமர்சித்தவர்களை பின்னாளில் புலிகள் துப்பாக்கியுடன் தேடியலைந்த வரலாறுகளும் இல்லாமலில்லை.
ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. புலிகளை ஒழித்த படையினரை சுஹதாக்கள் நினைவுப் பூங்கா அருகிலேயே மேடையேற்றி கௌரவிக்கும் அளவு இன்று நிலைமை முற்றிலும் மாற்றமடைந்திருக்கிறது. எனவே இந்த சாதகமான சூழ்நிலை குறித்துச் சிந்திக்குமாறு வலியுறுத்த விரும்புகிறோம்.
இனிவரும் காலங்களிலாவது அரசியல்வாதிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்ற நிறுவனமாக அல்லாமல் சுஹதாக்கள் குடும்ப நலன்களை முன்னிறுத்திப் பாடுபடுகின்ற நிறுவனமாக "முஸ்லிம் தேச சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம்' செயற்படும் என நம்புகிறோம்.
2010 ஆம் ஆண்டில் அனுஷ்டிக்கப்படவிருக்கின்ற 20 ஆவது ஷûஹதாக்கள் தினமாவது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விடியலைக் கொண்டு வருவதற்கான ஒருநல்ல நாளாக அமைய வேண்டும். அந்த இலக்கை நோக்கி "சுஹதாக்கள் நிறுவனம்' நகருமா?
(பிந்திக் கடைத்த தகவல்: இந்த வருடம் சுஹதாக்கள் தின நிகழ்வுகளை பள்ளிவாயலில் மாத்திரம் நடத்துமாறும் கடைகளை மூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் காத்தான்குடி பொலிசார் காத்தான்குடி ப.மு.நி.சம்மேளனத்திடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர். இதனையடுத்து 2ம் திகதி இரவு சம்மேளனம் கடைகளைத் திறக்குமாறு பள்ளிவாயல் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவித்துள்ளது.
இதற்கு பொலிசார் சொன்ன காரணம்தான் விசித்திரமானது. ""உங்கள் பள்ளியில் சுட்ட புலிகள்அழிக்கப்பட்டுவிட்டார்கள். அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் அமைச்சர்களாகி விட்டார்கள். இனி எதற்கு சுஹதாக்கள் தினம்?என்று கேட்டார்களாம்.
இருப்பினும் சுஹதாகக்ள் தினத்தன்று கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பாடசாலைகள் வழமைபோன்று நடைபெற்றன.
புலிகளை அழிக்கலாம்..புலிகள் நமக்குச் செய்த கொடூரங்களை நமது மக்களின் மனங்களில் இருந்து அழிக்கலாமா என்ன..?
கவனம்...அடுத்த வருடம் சுஹதாக்கள் தினத்துக்கு வந்து முதலாம் குறிச்சிப் பள்ளியின் சுவர்களிலுள்ள ஓட்டைகளை அடைத்து விடுங்கள் என்பார்கள்...அதையும் கேட்டு நம்மவர்கள் தலையாட்டாமல் இருந்தால் சரி..
Wednesday, July 29, 2009
பலிபீடமாக மாறிய பள்ளிவாயல்!


ஜேர்மனியில் நீதிமன்றினுள் வைத்து முஸ்லிம் பெண் ஒருவரை யூத இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் குறித்து சில வாரங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளிலிருந்து மீள்வதற்கிடையில், இலங்கையின் பேருவளையில் பள்ளிவாசல் ஒன்றினுள் வைத்து முஸ்லிம்களை முஸ்லிம்களே வாள்களால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முனையாது கத்தியால் எதிர்கொள்ளத் துணிந்ததன் விளைவு இன்று இரு உயிர்களைப் பலியெடுத்து, 15 இற்கும் அதிகமானோரைக் காயப்படுத்தி, விலைமதிப்பிட முடியாத அல்லாஹ்வின் இல்லத்தை அடித்து நொருக்கித் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறது.
காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் பேருவளை பள்ளிவாயல் படுகொலை சம்பவம் நடந்திருப்பது கவலைக்குரியது.
இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்குமே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்ற இச்சம்பவம், இந்நாட்டின் மும்மொழி ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. அத்துடன் ஒவ்வொரு ஊடகங்களும் இதனை ஒவ்வொரு விதமாக அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றன.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே அல்லது முஸ்லிம் அமைப்புகளிடையே அவ்வப் போது முரண்பாடுகள் எழுவதும் ஈற்றில் அவை வன்முறைகளில் முடிவதும் வழமையானவைதான். இருந்த போதிலும் இறுதியாக பேருவளையில் இரு தரப்பினரிடையே தோன்றிய கருத்து முரண்பாடு பள்ளிவாயலினுள் வைத்தே ஒரு சகோதரனை இன்னொரு சகோதரன் படுகொலை செய்யுமளவு பாரதூரமாக மாறியமை இதுவே முதற்தடவையாகும்.
உண்மையில் அங்கு என்னதான் நடந்தேறியது?
பேருவளை மஹகொட, மாளிகாச்சேனையில் அமைந்துள்ள "பைதுல் முபாறக் அல் முஸ்தபவிய்யா புகாரி தக்கியா'வின் 130 ஆவது வருடாந்த புகாரி கந்தூரி வைபவத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த பள்ளிவாயல் வளாகத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்தப் பள்ளிவாயலுக்கு மிகச் சமீபமாகவே தற்போது தாக்குதலுக்கு இலக்கான "ஜம்இய்யதுல் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதியா' அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட "மஸ்ஜிதுர் ரஹ்மான்' பள்ளிவாயல் அமைந்துள்ளது.
கந்தூரி நிறைவுற்ற நாளுக்கு மறுதினமான வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுர் ரஹ்மானில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி ஒருவர், புகாரி தக்கியாவில் நடைபெற்ற கந்தூரி குறித்து கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனமே குறித்த வன்முறையின் தோற்றுவாயாக அமைந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி குத்பா நிறைவுற்று சில மணி நேரங்களின் பின்னர் அப்பகுதியில் சலசலப்பு தோன்றியுள்ளது. இரு தரப்பினதும் ஆதரவாளர்களிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 6 மணியளவில் "மஸ்ஜிதுர் ரஹ்மான்' பள்ளிவாயல் வளாகத்தினுள் பிரவேசித்த சிலர் பள்ளிவாயலுக்கு சிறியளவில் சேதத்தை விளைவித்து விட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து உடனடியாக பேருவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொலிஸார் இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இச்சம்பவத்துக்குப் பின்னர் இரு தரப்பினரிடையே பதற்ற நிலை அதிகரித்துள்ளது. சிலவேளைகளில் மோதல்களும் நிகழக் கூடும் என அஞ்சிய பிரதேசவாசிகளில் சிலர் மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் புகாரி தக்கியா முக்கியஸ்தர்களுக்கு இது குறித்து அறிவித்ததுடன் பிரச்சினையை நிதானமாகக் கையாளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் பொலிஸாருக்கும் இதன் அபாயத்தை தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயல் மீது தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என அஞ்சியதன் காரணமாக பள்ளிவாயலைப் பாதுகாக்கும் கடமையில் சுமார் 30 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் குறித்த இடத்திற்கு பொலிஸார் வந்து பாதுகாப்பு அளிப்பர் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடத்தில் இருந்தது. ஆனாலும் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரை பொலிஸார் அங்கு வரவில்லை. வந்ததோ சுமார் 500 பேருக்கும் அதிகமான குண்டர் படைதான். கையில் கத்திகள், வாள்கள் மற்றும் சில கூரிய ஆயுதங்களுடன் மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் பிரவேசித்த அவர்கள் கையில் அகப்பட்ட சகலரையும் முடியுமானவரை தாக்கினர். பெரும் கூட்டத்தைக் கண்டு தப்பியோடியவர்களைத் தவிர மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் நின்றிருந்த சகலருமே தாக்குதலுக்கு இலக்காகினர். பள்ளிவாயலின் மலசல கூட பகுதிக்குள் ஒளிந்திருந்த முஹம்மது முஹைதீன் ( 37) முஹம்மது மாஹிர் (30 ) ஆகிய இருவரும் ஸ்தலத்திலேயே கொலை செய்யப்பட்டனர். ஏனைய 15 இற்கும் அதிகமானோர் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு ஆளாகினர். அத்துடன் பள்ளிவாயலின் கதவுகள், யன்னல்கள், தளபாடங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாயல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் துவிச்சக்கர வண்டிகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளிவாயலுடன் இணைந்ததாக அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸாவும் மருத்துவ நிலையம் ஒன்றும் இதன்போது சேதமாக்கப்பட்டன.
இச்சம்பவத்தில் மரணமடைந்த இருவரினதும் ஜனாஸாக்கள் சனிக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டன. ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இதன்பின்னர் நல்லடக்கத்தில் கலந்துகொண்டோர் பேருவளை பொலிஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷமெழுப்பினர்.இதனையடுத்து அங்கு மீண்டும் பதற்ற நிலை தோன்றியதால் மஹாகொடை மற்றும் மாளிகாச்சேனை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலையும் பொலிசார் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.
இதற்கிடையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பலரை பொலிசார் கைது செய்தனர். சனிக்கிழமை காலை பேருவளை பகுதியிலிருந்து காலி பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றைத் தடுத்து நிறுத்திய பொலிசார் அதிலிருந்த 28 பேரை கைது செய்தனர். இறுதியாக இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை 131 பேர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேருவளை புகாரி தக்கியா நிருவாகத்தினர் மேற்படி பிரச்சினையை தூண்டிய மௌலவி குறித்து தாம் பொலிசில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதனாலேயே மக்கள் கொந்தளித்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
"மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி மக்களின் மனம் புண்படும்படி பேசினார். இது தொடர்பாக தக்கியாவைச் சேர்ந்த மௌலவிமாரும் சட்டத்தரணிகளும் பொலிசில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து குறித்த மௌலவியை இரண்டு மணித்தியாலங்களுக்குள் பொலிசில் ஒப்படைப்பதாக மஸ்ஜிதுர் ரஹ்மான் நிருவாகிகள் உறுதியளித்தனர். இருப்பினும் இது நடக்காததால் ஆவேசமடைந்த மக்கள் மஸ்ஜிதுர் ரஹ்மானை நோக்கிச் சென்றனர். அங்கு இரு தரப்பினரிடையேயும் கைகலப்பு நடந்தது.'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எது எப்படியிருப்பினும் மார்க்கத்தின் பெயரால் எழுந்த முரண்பாடு முழு முஸ்லிம் சமூகத்தையுமே வெட்கித் தலைகுனியச் செய்யுமளவு வன்முறையில் முடிந்திருக்கிறது.மார்க்க விவகாரங்கள் மற்றும் தஃவா பிரசாரங்கள் தொடர்பில் போதிய கள அனுபவமும் தெளிவான சிந்தனையுமற்றவர்களாலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி மார்க்க முரண்பாடுகள் தோற்றம் பெறுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இவ்வாறானதொரு அகோரம் நிகழ்ந்தேறிய பின்னரும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மார்க்கத்தின் பெயரால் பிளவுகளும் சண்டை சச்சரவுகளும் நிகழ்ந்தேறுவது அழகல்ல. அது நாம் பின்பற்றும் மார்க்கம் நமக்குக் காட்டித் தந்த வழிமுறையுமல்ல.
Saturday, July 25, 2009
Subscribe to:
Posts (Atom)













